பொதுவாகவே வெள்ளாடுகள் மழைக்காலத்தில் அதிகப்படியான உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக மழைக்காலத்தில் காடுகளில் நீண்ட நாட்களுக்குப் பின் புதிதாக முளைத்திருக்கும் புற்களை மேய்வதால் செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளை அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். காலை வெயில் வந்த பின்பே கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். ஈரப்பதம் நிறைந்த சேறும் சகதியுமாக உள்ள காடுகளில் ஆடுகளை மேய்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் கால் குளம்பின் இடுக்குகளில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இடி மின்னலுடன் கூடிய மழையின் பொழுது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லக்கூடாது. இடி மின்னலின் போது மரத்தடியில் கால்நடைகளை நிற்பதற்கும் அனுமதிக்கக்கூடாது.
கொட்டகை அமைத்து பரண் மேல் ஆடு வளர்ப்பவர்கள் அல்லது கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பவர்கள் இருப்பில் உள்ள தீவனத்தை ஈரப்பதம் படாத இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கொட்டகையை பக்கவாட்டில் இரண்டு முதல் மூன்று அடி நீட்டி விடுவதால் மழைச்சாரல் நேரடியாக உள்ளே விழுவதை தடுக்கலாம்.
மழை பெய்யும் பொழுது ஆடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பினால் மழைக்கு ஒதுங்கியே நிற்கும். எனவே, மேய்ச்சல் குறைந்து உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புண்டு. எனவே, ஆடுகளை கொட்டகையிலேயே கட்டி வைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பது நல்லது. மழைக்காலங்களில் இயல்பாக கொடுக்கும் தீவனத்தை விட கூடுதலான தீவனம் உட்கொள்ளும் என்பதால் தீவனத்தில் ஊட்டச்சத்துக்கலின் சேறிவை குறைத்து அதிகப்படியான அளவில் தீவனம் கொடுக்க வேண்டும்.
உலர் தீவனத்தை தார்பாய்கள் கொண்டோ அல்லது பாலித்தீன் பைகளை கொண்டோ மூடி வைப்பதால் மழையில் நனைந்து வீணாவதை தவிர்க்கலாம். அடர்தீவன கலவையை 15 நாட்களுக்கு ஒருமுறை தயாரித்து கொள்வதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். மேலும், மழைக்காலத்தில் உயரழுத்த மின் கோபுரங்கள், மின்கம்பங்கள், தென்னை மரம், பனைமரம் போன்றவற்றின் அருகில் ஆடு, மாடுகளை நிற்க வைப்பதையும் அடர்ந்த பல கிளைகளைக் கொண்ட மரத்தினடியில் மாடுகளை ஆடுகளை கட்டி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். திடீரென வீசும் காற்றால் அல்லது தாக்குகின்ற இடி மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமாகும்.
அதிகப்படியான பசுந்தீவனத்தை உட்கொள்வதால் இளகிய நிலையில் சாணம் போடும். இதை கழிச்சல் என்று நினைக்காமல் உலர் தீவனததோடு கலந்து பசுந்தீவனம் கொடுப்பதால் தவிர்க்கலாம். நீர்நிலைகளின் அருகில் ஆடு, மாடுகளை மேய்ப்பதால் குடற்புழு தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இது போன்ற பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்க வேண்டும்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07