தளி பகுதியில் கால்நடைகளுக்கு தீவனபயிர் (fodder crops) சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோடை காலத்தில் கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு குறையும்.
கால்நடை வளர்ப்பு
உடுமலை, தளி, அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பருவமழை மற்றும் தண்ணீர் வசதிக்கு ஏற்றவாறு நீண்டகாலம் மற்றும் குறுகியகால பயிர்கள் காய்கறிகள் தானியங்கள், நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலை நம்பி எண்ணற்ற கூலித் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால் அனைத்து சாகுபடியிலும் (Cultivation) எதிர்பார்த்த அளவு விளைச்சலையும் வருமானத்தையும் விவசாயிகளால் ஈட்ட முடிவதில்லை. அதன்படி சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் விளைச்சலை அளிக்காமல் விவசாயிகளை கைவிட்டாலும் ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடை (Livestock) வளர்ப்பு நிரந்தர வருமானத்தை அளித்து கை கொடுத்து வருகிறது.
ஆட்டின் புழுக்கை, கோழி எச்சம், மாட்டுச்சாணம் போன்றவை இயற்கை உரமாக விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பால், நெய், தயிர், கோமியம் உள்ளிட்டவை நாள்தோறும் கால்நடை வளர்ப்போருக்கு நிரந்தர வருமானத்தை அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற தொழிலாளர்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீவனப்பயிர்
மழையால் நிலத்தடி நீர்மட்டம் (Groundwater) உயர்ந்ததால் விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. அத்துடன் கால்நடைகளுக்கு தேவையான புற்கள், செடிகள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வயல்வெளிகள் மற்றும் சாலை ஓரங்களில் முளைத்துள்ள செடிகள் காய்ந்து விட்டது. ஆனால் தீவனப்பற்றாக்குறையை முன்கூட்டியே அறிந்த விவசாயிகள் நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். அவை தற்போது அறுவடை நிலையை எட்டி உள்ளது. இதன் காரணமாக கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னை மரங்களுக்கு இடையில் பசுந்தீவன சாகுபடி! இனி தீவனத் தட்டுப்பாடு இல்லை