திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் Peste des petits ruminants (PPR) நோயினை ஒழிக்கும் பொருட்டு PPR-ஒழிப்பு திட்டத்தில் 2024-ஆம் ஆண்டு 3 வது சுற்று தடுப்பூசி ஏப்ரல் 29 தொடங்கி 30 நாட்களுக்கு 4 மாதங்களுக்கு மேல் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இந்நிலையில் ஆட்டுக் கொல்லி நோய் என்று அழைக்கப்படும் PPR நோயானது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
ஆட்டுக் கொல்லி நோய் பரவும் விதம்:
இந்நோயானது வேகமாக பரவும் தன்மையுடையது. நீர், காற்று, உயிர்திரங்கள், பண்ணைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மூலமாக PPR நோயானது பரவுகிறது. இந்நோய் தாக்கினால் வயிற்றுப்போக்கு, கருச்சிதைவு ஏற்பட்டு இறுதியில் உயிருக்குச் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் PPR நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவசமாக 100% தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு 2024 ஏப்ரல் 29 முதல் தொடங்கி 30 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை விவசாய பெருமக்கள்/கால்நடை வளர்ப்போர்கள் அணுகலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
கோடைக்கால வெப்பம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோடைகால நோயிலிருந்து தங்களது கால்நடைகளை, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல், குறைந்த உணவு உட்கொள்ளுதல், அடர்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், தோல் தன்பொழிவுத் தன்மையை இழத்தல், படபடப்புடன் அதிகப்படியான இதய மற்றும் சுவாசத்துடிப்பு, மூச்சு இரைப்பு, கருவிழி சுருங்கி உள்நோக்கி செல்லுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இவை தவிர்த்து, அதிக பசுந்தீவனத்தை மட்டும் விரும்பி உண்ணுதல், வெயிலில் நிழலை தேடி செல்லுதல், பாலில் திடத்தன்மை உற்பத்தி திறன் குறைதல், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக திடீரென மயங்கி விழுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Read more:
மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?
Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?