தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகள் நடத்த சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, விலங்குகள் நல அமைப்பான PETA எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டபோது, தமிழகமே திரண்டெழுந்து, சாலைக்கு வந்து போராடியது.
இதையடுத்து, சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால், கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு விளையாட்டுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
-
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
-
தற்போது கொரோனா தொற்று காரணமாக, 2021-ம் ஆண்டில் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.
-
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
-
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
-
இந்த நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் (Total Capacity) அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
-
பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை (Thermal Scanning) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
-
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
-
பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
-
இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!
ரபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!
நெற்பயிரிரைத் தாக்கும் பூச்சிகள்- கட்டுப்படுத்த உதவும் இயற்கை மருந்துகள்!