கடக்நாத் இனக் கோழிகள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நம் நாட்டு இன கோழி ஆகும். இவை கருங்கோழிகள் என்றும் கருங்கால் கோழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை உள்ளூர் மொழியில் காளி மாசி என்று அழைக்கப்படுகிறது. உடல் முழுக்க கருப்பு நிறத்தில் காணப்படுவதால் காளியின் தங்கை என பொருள்படும் வகையில் இவை காளி மாசி என்றழைக்கப்படுகின்றன.
பண்புகள்
குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய தன்மை படைத்துள்ள இந்தக் கோழிகள் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. கோழி குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு கலந்த நிறத்திலும் வளர்ச்சியடைந்த கோழிகள் கருநீல நிறத்திலும் காணப்படுகின்றன. கால், நகம், அலகு மற்றும் முட்டை போன்றவையும் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
இந்த கோழியின் இறைச்சி கருப்பு நிறத்தில் இருக்கின்றன. மெலனின் என்னும் நிறமி அதிக அளவில் காணப்படுவதால் கோழியின் இறைச்சி மற்றும் முட்டை போன்றவையும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த இறைச்சியில் 25 சதவீதம் வரையில் புரதச்சத்தும் 0.7 முதல் 1.05 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் சத்தும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பயன்கள்
இந்தக் கோழியின் இறைச்சியில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முறை பற்றிய குறிபபுகள் காணக் கிடைக்கின்றன. இந்த இறைச்சியை சாப்பிடுவதால் நரம்புகள் விரிவடைந்து நரம்புத் தளர்ச்சி நோய் குணமடைவதாக தெரிவிக்கப்பட்டூள்ளது. இந்த இறைச்சியில் உள்ள கொழுப்பு தன்மை நல்ல கொழுப்பு என மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது. பொதுவாகவே நாட்டுக்கோழிகளின் ஒயிட் மீட் ரத்த கொதிப்பு மற்றும் இதய நோய்களுக்கு நிவாரணம் அளிப்பது போல் இந்தக் கோழியின் இறைச்சியும் நாட்டுக்கோழி இறைச்சி என்கிற வகையில் நல்ல சந்தை மதிப்பை பெறுகிறது.
விற்பனை வாய்ப்புகள்
ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிப்பதன் காரணத்தினால் சந்தையில் நாட்டுக்கோழிகளை விடவும் கடக்நாத் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருந்தாலும் இக்கோழி இறைச்சி கருப்பு நிறத்தில் இருப்பதால் பலரும் இதனை வாங்குவதற்கு விரும்புவதில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர். இத்தொழிலில் லாபம் நஷ்டம் என்பது எல்லாம் நமக்கு அமையும் வாடிக்கையாளர்களை பொறுத்தே அமைகிறது.
முட்டை விற்பனை
நூறு கடக்நாத் கோழிகளை வைத்து பண்ணையை நடத்தும் ஒரு விவசாயி ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோழியிலிருந்து 100 முட்டையை பெற்றால் ஆயிரம் முட்டைகள் அவருக்கு கிடைக்கும். ஒரு முட்டையின் விலை 40 ரூபாய். எனவே, அவர் வருடம் ஒன்றுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். ஆனால், பத்தாயிரம் முட்டைகளை விற்பதற்கான சந்தை வாய்ப்பை அவர் பெற்றிருக்க வேண்டும்.
கோழிக் குஞ்சு விற்பனை
இந்த 10 ஆயிரம் முட்டைகளை அடைக்க செய்யும் போது குறைந்தபட்சம் 1500 கோழிக்குஞ்சுகளை பெறலாம் ஒரு கோழி குஞ்சு விலை 60 ரூபாய் என கொண்டால் 4 லட்சத்து 500 ரூபாய் வருமானம் ஈட்டலாம்
இறைச்சி விற்பனை
இந்த கோழி குஞ்சுகளை வளர்க்கும் பொழுது 10 சதவீத இழப்பு ஏற்படுவது வழக்கம் ஹன்சிக 6,500 கோழிகள் சந்தை வயதை அடையும் ஒரு உயிர் கொடுக்கும் தொகை 400 ரூபாய் எனக் கொண்டாலும் 24 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.
ஆண்டுக்கு 6000 கோழிகளை விற்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் 500 கோழிகளை விற்பதற்கான வாடிக்கையாளர்களை பண்ணையாளர்கள் திறம்பட கையாள வேண்டும். சந்தை வாய்ப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்ல வருமானம் கிடைப்பது உறுதி.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001