முதுகுத் தண்டு உடைய பாலூட்டிகளில் பிளவுபடாத கால் குளம்புகளை கொண்டுள்ள குதிரை, வரிக்குதிரை இனத்தை சார்ந்தவை இந்த கழுதைகள். இந்த இன கால்நடைகளில் குதிரைகள், மட்ட குதிரைகள், கழுதைகள், கோவேறி கழுதைகள் போன்றவை வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
பழங்காலம் தொட்டே பொதி சுமப்பதற்காகவும் பயணங்களுக்கும் கழுதைகளும் இந்த குடும்பத்தை சார்ந்த இதர கால்நடைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் போக்குவரத்து எளிமையான காரணத்தினாலும் கழுதைகள் கவனிப்பாரற்று இன்று காணாமல் போனவர்களின் பட்டியலில் தலையிடம் வகிக்கிறது. பயன்பாடு குறைந்து போனது மட்டுமின்றி சீனாவில் பாரம்பரிய மருந்து தயாரிப்புக்காக ஆண்களுக்கு 50லட்சம் கழுதைகள் கொல்லப்படுவதும் இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறந்து வருவதற்கு ஒரு காரணமாகும்.
மனிதர்களால் சாலை அமைக்க முடியாத கரடுமுரடான மலைப் பகுதிகளுக்கு பொருட்களை சுமந்து செல்வதற்கு இன்றளவும் இந்த கால்நடைகளே பயனுள்ளவையாக இருக்கின்றன. வயது முதிர்ந்தவர்களையும் உடல் குறைபாடு உடையவர்களையும் மலைப் பிரதேசங்களுக்கு இவை சுமந்து செல்கின்றன. தேர்தல் சமயங்களில் வாக்குப் பெட்டிகளை சுமந்து செல்வதற்காகவும், ராணுவத்தில் ஆயுதங்களை மலை மேல் எடுத்து செல்வதற்கும் இந்த கழுதைகளும், கோவேறி கழுதைகளும் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. மட்டுமின்றி இவற்றின் பால், தோல், இறைச்சி போன்றவை மருத்துவ குணம் கொண்டவை என்பதால் இவை மருந்து தயாரிப்பிலும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
கழுதை பாலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நமது ஊர்களில் கழுதை வளர்ப்பவர்கள், மேய்ப்பவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிவந்து வீட்டு வாசல்களில் கழுதையின் பால் கறந்து கொடுப்பதை நாமெல்லாம் பார்த்திருப்போம். கழுதை பாலில் மருத்துவ குணங்கள் இருப்பதால் பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுப்பார்கள். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பல ஆய்வுக்கட்டுரைகள் கழுதை பாலின் மருத்துவ குணத்தை பேசுகின்றன. கழுதை பாலை கறந்த விரைவில் குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும் என்பதால் கழுதை பண்ணை அமைந்துள்ள இடங்களை சுற்றி வீடுகளுக்கு நல்ல கிராக்கி கூடி வருவதாகவும் தெரிவிக்கின்றன பல கட்டுரைகள்.
பதப்படுத்தப்பட்ட கழுதை தோலும் இறைச்சியும் சீனாவில் இஜியாவோ என்னும் பாரம்பரிய மருந்து தயாரிக்க பயன்படுகிறது. உலக அழகி கிளியோபாட்ரா தன்னுடைய அழகை பாதுகாப்பதற்காக கழுதை பாலில் தான் குளித்திருக்கிறாள். கழுதையின் பாலின் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை ஆய்ந்து பார்த்த கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் ஐடி ஊழியர் MBA பட்டதாரி அபே பேபி தன்னுடைய வேலையை உதறிவிட்டு 32 கழுதைகளோடு கழுதை பண்ணை தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டு 15 கழுதைகள் இறந்து போக மனம் தளராமல் இன்னும் பல கழுதைகளை வாங்கி தன்னுடைய இரண்டு ஏக்கர் பண்ணையில் வளர்த்து வருகிறார் இவர். கழுதையின் பாலில் இருந்து பல அழகுசாதனப் பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07