எருதுகள் விவசாயத்தில் நிலங்களை உழுவதற்கும், நிலங்களுக்கு நீர் பாய்ச்சவும், பயிர் வகைகளுக்குப் பொதி அடிக்கவும், சுமைகளை ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. எருதுகளை நன்றாகப் பராமரித்தால் நாம் உட்படுத்தும் வேலைகளைச் செவ்வனே செய்வது மட்டுமின்றி, அவற்றின் வாழ்நாளையும் அதிகப்படுத்தி மிகுதியான இலாபத்தை நமக்கு ஈட்டித் தரும் வல்லமை கொண்டவை.
தேர்ந்தெடுக்கும் முறை (Selections of Bull)
-
எருதுகள் ஒழுங்கான உடல் கட்டமைப்பும், அதிக உயரம் மற்றும் நீளம் உடையதாக இருக்க வேண்டும்.
-
அதிக நீளத்தைக் கொண்ட எருதுகள் அதிவேகமாகச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
-
திடமாகவும், வட்ட வடிவிலும் இருக்க வேண்டும். கால்கள் உறுதியாகவும், எலும்புகள் கடினத் தன்மையுடனும் மொத்த உடம்பும் தசைப்பற்றுடனும் இருக்க வேண்டும்.
-
எருதுகள் நடக்கும் பொழுது சரியான இடைவெளி விட்டு சீராக நடக்க வேண்டும். கால் குளம்புகள் திடமாகவும், கருப்பு நிறத்தில் பளபளப்பாகவும் இருக்க வேண்டும்.
-
குளம்புகள் இரண்டும் சமச்சீருடன் இருக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் எந்த வித வீக்கவும், கட்டிகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
-
எருதுகள் நிற்கும் பொழுது தலை தூக்கியும், வால்பகுதி உயர்ந்தும் காணப்பட வேண்டும். மேலும் எருதுகள் வேலை செய்யம் பொழுது சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கும் முறைகள்
-
பயிற்சி பெற்ற எருதுகளை வேலை செய்ய வைப்பதற்கு ஒரு நபர் போதுமானதாகும். ஆனால் பயிற்சி பெறாத எருதுகளை நாம் நிலம் உழுவதற்குப் பயன்படுத்தும் 3 பேர் தேவை.
-
பயிற்சி கொடுப்பதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பாக எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்த வேண்டும்.
-
எருதுகளுக்குச் சுமைகளை ஏற்றுவதற்குப் பயிற்சி கொடுக்கும் பொழுது ஒரே ஜோடி எருதுகளைப் பயன்படுத்த வேண்டும்.
-
மேலும் இடது புறம் கட்டும் எருதை எப்பொழுதும் இடது புறத்திலும், வலது புறத்தில் கட்டும் எருதை எப்பொழுதும் வலது புறத்திலும் மட்டுமே கட்ட வேண்டும்.
-
எருதுகளின் கழுத்துப் பகுதியில் மரக்கட்டையாலான கலப்பைக் கொண்டு இரு எருதுகளைச் சேர்த்து கட்டிய பிறகு கலப்பையின் நடுவே 70 கிலோ எடை கொண்ட சுமையை கலப்பையின் நடுவே கயிற்றைக் கொண்டு கட்டி விட்டு எருதுகளுக்கு வலதுபுறமாகச் செல், இடது புறமாகச் செல், நேராகச் செல் மற்றும் நில் போன்ற கட்டளையை இட வேண்டும்.
உணவளிக்கும் முறை
-
பொதுவாக விதை விதைக்கும் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் எருதுகள் கடுமையான வேலைக்கு உட்படுத்தப்படுகின்றன.
-
பொதுவாக ஓர் எருதுக்கு 3 முதல் 4 கிலோ வரை அடர்தீவனம், 15 முதல் 20 கிலோ வரை பசுந்தீவனம், மற்றும் 5 முதல் 6 கிலோ வைக்கோல் போன்ற உலர்தீவனம் கொடுக்க வேண்டும்.
கடைபிடிக்க வேண்டியவை (Follow)
-
மூன்று வயதைக் கடந்த பிறகு தான் எருதுகளை வேலைக்கு உட்படுத்த வேண்டும். எருதுகள் கரடு முரடான பாதைகளில் செல்லும் பொழுது கால்களில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க எருதுகளை வேலைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் மிகுந்த பாதுகாப்பான முறையில் இலாடம் அடிக்க வேண்டும்.
-
மேலும் இலாடத்தை 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எருதுகளை வேலைக்கு உட்படுத்துவதற்கு முன்னும் பின்னும் வைக்கோல் கொண்டு எருதுகளின் குளம்புகளைத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
-
வெயில் காலங்களில் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் எருதுகளை வேலைக்கு உட்படுத்தலாம்.
-
வேலை நேரங்களுக்கு இடையே 3 மணி நேரமாவது ஓய்வு கொடுக்க நிழலில் கட்டி வைத்து தண்ணீர் மற்றும் சிறிது தீவனம் தர வேண்டும்.
-
எருதுகளின் உடல்நிலை மற்றும் காலநிலையைப் பொருத்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 கி.மீ தூரம் செல்ல எருதுகளைப் பயன்படுத்தலாம்.
-
ஜோடி எருதுகளை வேலைக்குப் பயன்படுத்தும் பொழுது ஒரே அளவும் வலிமையும் கொண்டதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று பெரியதாக இருந்தாலும் கழுத்துப் பகுதி சரியாகப் பொருந்தாது. மேலும் ஒரு எருது அதிக சுமையைப் பெற நேரிடும்.
-
எருதுகளைப் பராமரிப்போர் எருதுகளை எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது.
-
எருதுகளை பட்டினி போடக் கூடாது. ஓய்வின்றி எருதுகளை வேலைக்கு உட்படுத்தக் கூடாது.
-
எருதுகள் வேகமாகச் செல்வதற்காக தார் கம்பு கொண்டு எருதுகளின் பின்பகுதிகளில் குத்தக் கூடாது.
தகவல்
இரா.உமாராணி
பேராசிரியர், கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், திருப்பரங்குன்றம், மதுரை
பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!