தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் தொகைப் பெருக்கம், பெருகி வரும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் இன்று விளை நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி மழை அளவு குறைந்து வருவது, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், கூலிக்கு ஆள்கள் கிடைக்காதது, அதிக கூலி ஆகிய காரணங்களால் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனம் கிடைப்பதில்லை.
மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி முறை விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனங்களுக்கு ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் 7 முதல் 10 நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையிலான வேலையாள்கள், குறைந்த நீரில் ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை தடையின்றி உற்பத்தி செய்யமுடியும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனமானது, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீரான தரம், சுவை, சத்துக்கள் நிறைந்து காணப்படும். கல், மண், தூசி, பூச்சி மருந்துகள் ஆகியவை இல்லாமல் இருக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 800 முதல் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.
பயன்படுத்தும் விதைகள்
நன்றாகக் காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கோதுமை, பார்லி, ஓட்ஸ், கேழ்வரகு, காராமணி ஆகிய பயிர் விதைகளாக இருக்க வேண்டும். நன்றாக முளைப்புத் திறன் உள்ள விதைகளாகவும் இருக்க வேண்டும்.
உற்பத்தி முறை
20-க்கு 15 அடி அளவுள்ள எளிமையான பசுமையான நிழல் வலை குடில் (பசுமைக்குடில்) அமைத்துக் கொள்ளலாம். இந்த குடிலில் மரம், இரும்பு தகடால் ஆன சாரம் வைத்து ரேக் அமைத்துக் கொள்ள வேண்டும். நிழல்வலை குடிலின் வெப்பநிலை 24 முதல் 27 டிகிரி செல்சியல், ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். முளை கட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி, ரேக்கில் அடுக்கி வைத்து விடலாம். தினமும் ஐந்தாறு முறை பூவாளி கொண்டோ அல்லது சிறிய நுண் நீர் தெளிப்பான் கொண்டோ, நீர் தெளிக்க வேண்டும்.
8 நாள்களில் 15 முதல் 20 செ.மீ. அளவுக்கு பசுந்தீவனம் வளர்ந்து விடும். இந்த பசுந்தீவன புற்களை வேரோடு எடுத்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 300 சதுர அடிப் பரப்பளவில், 500 முதல் 600 கிலோ பசுந்தீவனம் தினமும் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ மக்காச்சோளத்துக்கு 6 முதல் 7 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.
பயன்கள்
ஒரு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 1 முதல் 2 லிட்டர் நீர் போதுமானது. இதே அளவு பசுந்தீவனத்தை நிலத்தில் பயிரிட்டால் 60 முதல் 70 லிட்டர் நீர் தேவைப்படும். குறைந்த காலத்தில் அதாவது 7 முதல் 8 நாள்களில் அறுவடை செய்து விடலாம். கடும் வறட்சி காலங்களிலும் எளிமையாக பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தில் அதிக புரதச் சத்துக்கள் உள்ளன. மிகவும் சுவையாக இருப்பதால், கால்நடைகளுக்கு கொடுக்கும் அடர்தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கறவை மாடுகள் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பாலின் தரமும் உயர்ந்து காணப்படும்.
ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தில் உள்ள சத்துக்களின் அளவு
ஈரப்பதம் - 80 முதல் 85 சதவீதம், புரதச் சத்து - 13 முதல் 14 சதவீதம், நார்ச்சத்து - 7 முதல் 9 சதவீதம், கொழுப்புச்சத்து - 3 முதல் 4 சதவீதம், நைட்ரஜன் அல்லாத சத்துக்கள் - 70 முதல் 75 சதவீதம், கால்சியம் - 0.3 முதல் 0.4 சதவீதம், பாஸ்பரஸ் - 0.3 முதல் 0.4 சதவீதம், செரிமான தன்மை 80 சதவீதம். எனவே அதிக அளவில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், குறைந்த மழை அளவு, வறட்சியான காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்க ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தை வளர்த்து கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனத்தை கொடுத்த பண்ணை வருமானத்தை, பெருக்கி, பசுந்தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.