நீரின் முக்கியத்துவம்
கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சராசரி நீரின் அளவு 25-30 லிட்டர் ஆகும். எனவே, மாடுகளுக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் அவசியம்.
- நீர் இன்றி அமையாது உலகு. நீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ இயலாது. மாடுகள் இதற்கு விதிவிலக்கல்ல. உயிரினங்கள் உயிர் வாழ, காற்றும், உணவும் எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ அதுபோல நீரும் அவசியமானதாகும். இதேபோல், கறவை மாடுகளுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானது.
- கறவை மாடுகளின் உடல் எடையில் 70 சதவீதம் நீரும், பாலில் 87 சதவீதம் நீரும் உள்ளது. நீரானது உணவு உட்கொள்ளுதல், செரித்தல், செரித்த உணவிலிருந்து தேவையான சத்துப் பொருள்களை ரத்தத்தில் சேர்த்தல் உள்ளிட்ட வேலைகளுக்கு அவசியமாகிறது.
- இதேபோல், உடலில் உள்ள தேவையற்ற கழிவுப் பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், உடலின் செல்களில் உள், வெளியில் உள்ள திரவத்தின் பி.எச். அழுத்தம், முக்கியமான உப்புச் சத்துகள் ஆகியவற்றை சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.
- மாடுகள் உட்கொள்ளும் நீரானது, குடிநீர், தீவனத்தில் உள்ள நீர், உணவுப் பொருள்கள் ஆக்சிஜனேற்றம் அடையும் நேரத்தில் உண்டாகும் நீர் என மூன்று வழிகளில் கிடைக்கிறது.
- பசுந்தீவனங்களில் 75-90 சதவீதம் நீரும், வைக்கோலில் 10-15 சதவீதம் நீரும் உள்ளது. 100 கிராம் புரதம் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 100 கிராம் நீரும், 100 கிராம் கார்போஹைட்ரேட் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 60 கிராம் நீரும் கிடைக்கிறது. கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சராசரி நீரின் அளவு 25-30 லிட்டர் ஆகும்.
- நீர்க் குறைவினால் ஏற்படும் விளைவுகள்: குறைவான அளவு நீரை மாடுகள் அருந்தும்போது உணவு செரிமானம் பாதிக்கப்படுகின்றன. உடலின் வெப்ப நிலை அதிகரித்து சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. நீர் உட்கொள்ளுதல் 20-22 சதவீதம் ஆக குறையும்போது, கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. ஆனால் நீர் அதிகம் உட்கொள்வதால் எந்தவித எதிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. நீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கச் செய்தல் அவசியம்.
நீர் இழப்பு
- உட்கொள்ளும் நீரானது மூச்சுக் காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும், சிறுநீர், சாணம் ஆகியவற்றுடனும் வெளியேற்றப்படுகிறது.
- சிறுநீரில் உள்ள யூரியாவானது நீரினால் பாதிப்பு இல்லாத அளவுக்கு கரைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
- உட்கொள்ளும் நீரின் அளவு சீதோஷ்ண நிலை, தீவனத்தின் தன்மை ஆகியவற்றை பொருத்து மாறுகிறது.
- கோடைகாலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20-30 சதவீதம் அதிகமாக இருக்கும். அதேபோல் நார்ச் சத்து நிறைந்த பொருள்கள், புரதச் சத்து நிறைந்த பொருள்களை உட்கொள்ளும் போதும் நீரின் தேவை அதிகரிக்கிறது.
- நீரின் தேவை பசுவை விட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும். தீவனத்தில் உள்ள உப்பின் அளவு,
- அதிக புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.
சுத்தமான தண்ணீர்
மாடுகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம். அசுத்தமான நீரால் குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் ஏற்படலாம். தாது உப்புகளினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக் கூடும். மாடுகளுக்கு அளிக்கும் நீருடன் கழிவு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இதனால் நோய் உண்டாகும் கிருமிகள் குடிநீருடன் கலந்து கால்நடைகள், கோழிகளில் பெரும் சேதத்தை விளைவிக்கலாம்.
சுத்தப்படுத்தும் முறை
- கறவை மாடுகளுக்கு அளிக்கும் நீரை கீழே குறிப்பிட்டவாறு சுத்தப்படுத்தி பின்னர் உபயோகிக்கலாம்.
- குளோரின், ஹைட்ரஜன் பெராக்ûஸடு ஆகியவற்றை கால்நடைகளுக்கு அளிக்கும் நீரில் கலந்து அளிப்பதால் நீரில் உள்ள நோய் உண்டாக்கும் கிருமிகள் அழிந்து நீர் சுத்தப்படுகிறது.
- பாலிபாஸ்பேட் என்னும் ரசாயனப் பொருளை நீருடன் கலந்து உபயோகிப்பதால் கால்சியம் கார்பனேட் போன்ற உப்புகள் படியாமல் தடுக்கிறது.
- புற ஊதாக் கதிர்களைக் கொண்டு நீரை சுத்தம் செய்யும் முறையும் வழக்கத்தில் உள்ளது.
- உணவின்றி கால்நடைகள் ஒரு மாத காலம் கூட உயிர் வாழ இயலும். ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது