இந்திய விவசாயிகளின் விவசாயம் பொய்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவை, கால்நடைகள். ஆனால், அந்த கால்நடைகளும் இறந்துவிட்டால் விவசாயகளின் வாழ்வாதாரம் என்னவாகும்? எனவேதான் பல காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றன.
பசு, எருமை, பொலிகாளை, காளை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி மற்றும் கோழி என அனைத்து வகையான கால்நடைகளுக்கும் காப்பீடு செய்து பயன்பெறலாம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் ஆரோக்கியத்துடனும்,
நோயின்றியும், எந்த விதமான காயங்களின்றியும், நிரந்தர அல்லது தற்காலிக ஊனமின்றியும் இருத்தல் வேண்டும். இழப்புக் காப்பீடு, ஊனக் காப்பீடு மற்றும் இடமாற்றக் காப்பீடு என மூன்று வகையான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன.
இழப்புக் காப்பீடு
இழப்புக் காப்பீடு என்பது கால்நடைகள் இறக்க நேரிட்டால் இழப்பீட்டுக் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ அல்லது விபத்தில் இறந்தாலோ காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இயற்கை சீற்றம், கலவரங்கள், போராட்டங்களின் போதோ அல்லது விஷக்கடி போன்ற அசாதாரண சம்பவங்களினாலோ கால்நடைகள் இறந்து போனால் இந்த காப்பீட்டுத் திட்டத்தின மூலம் இழப்பீடு பெறலாம்.
ஊனக் காப்பீடு
ஊனக் காப்பீடு என்பது நிரந்தர ஊனத்திற்காக இழப்பீடு கோர வகை செய்கிறது. வேலைக்காக வளர்க்கப்படும் கால்நடைகளில் நிரந்தர ஊனம் ஏற்பட்டு வேலைக்கு பயன்படுத்தாத சூழல் ஏற்பட்டாலோ, நிரந்தர ஊனத்தின் காரணமாக பொலிகாளைகளை இனவிருத்திப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டாலோ, நிரந்தர ஊனத்தின் காரணமாக கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ இழப்பீடு பெறலாம். மலட்டுத் தன்மையால் பசுக்கள் பாதிக்கப்பட்டு இருப்பினும் இழப்பீடு பெறலாம். ஆனால், இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் போது சிகிச்சை அளித்ததற்கான மருத்துவ ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
இடமாற்றக் காப்பீடு
கால்நடைகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் போது ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு பெற இடமாற்றக் காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச பயண தூரம் 80கி.மீ. எனுமாறு இருக்க வேண்டும்.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
2 வயதிற்கு மேற்பட்ட 10 வயதிற்குட்பட்ட கறவை மாடுகளையும், 3 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட எருமை மாடுகளையும் காப்பீடு செய்யலாம்.2 வயதிற்கு மேற்பட்ட காளைகளை காப்பீடு செய்யலாம். பொலிகாளைகளாக இருப்பின் 8 வயது வரையிலும் விரை நீக்கியவையாக இருப்பின் 12 வயது வரையிலும் காப்பீட்டின் மூலம் பயன் பெறலாம்.
தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் ஒருவரை அணுகி கால்நடையின் சந்தை மதிப்பை நிர்ணயித்து சான்றிதழ் பெற வேண்டும். கால்நடையின் இனம், வயது, பாலினம், இடம் ஆகியவற்றோடு கால்நடை அடையாள எண்ணும் இந்த சான்றிதழில் இடம் பெற வேண்டும். கால்நடை அடையாள எண் பொறிக்கப்பட்ட வில்லையை கால்நடையின் காதில் பொருத்தி வில்லை, உரிமையாளர், கால்நடை மூன்றும் தெரியுமாறு புகைப்படம் எடுக்க வேண்டும். காப்பீட்டு முகவர், கால்நடை முகவர் மற்றும் முகவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கால்நடையின் சந்தை மதிப்பை நிர்ணயித்து சந்தை மதிப்பில் நூறு சதவீதத்திற்கு மிகாமல் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துவிட்டால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் இறப்பறி சோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். இறப்பறி சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மருத்துவரின் சான்றிதழோடு கால்நடையின் அடையாள வில்லையையும் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
காப்பீடு செய்யப்படுவதற்கு முன்போ அல்லது காப்பீடு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள்ளாகவோ விபத்து ஏற்பட்டு இருந்தாலோ அல்லது நோயினால் பாதிக்கப்பட்டி இருந்தாலோ இழப்பீடு கோர இயலாது. கருணைக் கொலை செய்யப்பட்ட கால்நடைகளுக்கும் பாலிசியில் கூறப்பட்டுள்ள பயன்பாடுகளைத் தவிர காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலின்றி வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தி இருந்தாலோ கொலை செய்யப்பட்டு இருந்தாலோ இழப்பீடு கிடைக்காது. கால்நடைகள் காணாமல் போனாலோ திருடப்பட்டு இருந்தாலோ அல்லது காது வில்லை இல்லாமல் இருந்தாலோ இழப்பீட்டுத் தொகை கிடைக்காது. வெக்கை நோய், அடைப்பான், தொண்டை அடைப்பான், கோமாரி நோய் போன்ற நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு இறந்து போனால் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை.
ச. பாவா பக்ருதீன்
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், லூதியானா, பஞ்சாப்-141001.
சி.அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-07.
9677362633