நெல், வாழை, தென்னை போன்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
நெல் - மீன் வளர்ப்பு 0.03% மட்டுமே செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவை
- குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.
- அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.
- களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.
- அதிக நெல் விளைச்சல்.
- விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்
நெல் வயலில் 3 - 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி - உமி புண்ணாக்குகள் 2 - 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.
இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி. ஆர் 260 77, ஏ.டி.ட்டி - 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.
நெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.
- சம காலத்தில் (ஒரே காலத்தில்) இரண்டையும் வளர்த்தல்
- சுழற்சி முறை வளர்ப்பு
சமகால வளர்ப்பு முறை
இதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே போதுமானது. இதை நான்கு 250மீ2 (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி (அகழி) தோண்ட வேண்டும். இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபுறமும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும். சல்லடை அடைப்புடன் கூடிய சிறிய மூங்கில் தண்டினை (து) வாய்க்கால் அகழியுடன் சந்திக்குமிடத்தில் வைக்க வேண்டும். இதனால் மீன்கள் வெளியேறாமலும், சிறு மீன்களை விழுங்கும் பெரிய மீன்கள் உட்புகாமலும் பாதுகாக்க இயலும். இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
இவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற
நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு
நெல் வயல்களில் மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை மித தீவிர முறையில் வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்பிற்கு 4 மாதத்திற்கு 12 செ.மீ ஆழத்திற்கு வெளியே செல்லும் நீருக்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இறால் குதித்து வெளியே எங்கும் ஓடிவிடாமல் இருக்க 0.3 மீ நீருக்கு மேலே மடை போல் தடுப்பு கட்ட வேண்டும். அருகில் ஓரிரு சிறிய குழிகள் (1 x 2 x 0.5 மீ) வெட்டி வைத்தால் பழைய நீரை வடிக்கும்போதும் இறால் அறுவடை செய்யும்போதும் இறால்கள் தப்பிக்காமல் இருக்க உதவும். நாத்து நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2 - 3 செ. மீ அளவுடைய 1000 குஞ்சுகள் என்ற விகிதத்தில் வயலில் விட வேண்டும்.
பயன்கள்
- மீன்கள் நெற்பயிரின் உற்பத்தியை 5 - 15 சதம் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் மீன்களின் கழிவுகள் பயிருக்கு அங்கக உரமாகப் பயன்படுகிறது
- மீன்கள் வயலில் உள்ள பச்சைப் பசும் பாசிகள் (ஆல்காக்கள்) உண்டு விடுவதால் அவை நெற்பயிருடன் ஊட்டச்சத்துக்காகப் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது.
- திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை போன்ற மீன்கள் தேவையற்ற நீர்க் களைகளை உண்டு விடுகின்றன. இதனால் 80% நெல்லின் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
- முரல்ஸ், கேட்ஃபிஷ் போன்ற மீன்கள் நெற்பயிரின் தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகளை உண்டு விடுகின்றன.
- மீன்கள் மனிதர்களுக்கு மலேரியா மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும் கொசு போன்ற உயிரிகளை உண்டு விடுவுதால் நோய்ப்பரவல் குறைக்கப்படுகிறது.
- நெல் வயலில் வளர்ந்த மீன்களை விற்றுவிடலாம் அல்லது அடுத்த வயலில் விட்டு கூட்டு மீன் வளர்ப்பில் வளரச் செய்யலாம்.
குறைபாடுகள்
- நெற்பயிருக்கு பூச்சி நோய் மற்றும் களைக் கட்டுப்பாட்டிற்கு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறையில் இயலாது.
- மீனின் வளர்ச்சியை யொட்டி அதிக அளவு நீரைத் தேக்கி வைத்தல் என்பது எப்போதும் சாத்தியமாகாது.
- புல் கெண்டை போன்ற புல்திண்ணி மீன்கள் நெற்பயிரையும் உண்ண வாய்ப்புள்ளது.
- திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை மீன்கள் நெற்பயிரின் வேரினைப் பிடுங்கி விடக்கூடும்.
எனினும் முறையான பராமரிப்பின் மூலம் இக்குறைபாடுகளைச் சரிசெய்து விட முடியும்.
வளர்ப்பு முறை
நடவு செய்த 5 நாட்களுக்குப் பிறகு நுண் மீன்குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 5000 எண்ணிக்கையிலும், விரலளவு மீன் குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 2000 எண்ணிக்கையிலும் வயலினுள் விட வேண்டும். சரியாக உணவளித்தால் குறிப்பாக போதிய அளவு மிதவைத் தாவரங்கள் இருப்பின் விரைவில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். வழக்கமாக நெற்பயிருக்கு அளிக்கும் அளவை விட சற்று அதிகமாக உரமளித்தால் மிதவை உயிரிகள் நன்கு வளரும். பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த ஃபுயூரான் 1 ஹெக்டருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம். இதை அடி உரத்துடன் கலந்து இட்டு, பின் நிலத்தைச் சமப்படுத்தி விட வேண்டும்.
நுண் மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்குப் பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்குப் பிறகும் நீரை வடித்து விட்டுப் பின் அறுவடை செய்யலாம். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்துவிட வேண்டும். மிதவை உயிரிகளை உண்டு வாழ்வதால் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஹெக்டருக்கு 500 கிலோ வரை கிடைக்கும்.
சுழற்சிமுறை வளர்ப்பு
இம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்தபின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் முக்கிய பயன் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.
நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2 -3 செ.மீ அளவுள்ள நுன்குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 20000 குஞ்சுகளும், விரலளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 6000 குஞ்சுகளும் குளத்தில் விட வேண்டும். 10 வாரங்களுக்குப் பிறகு நுண்மீன் குஞ்சுகளையும், விரலளவு குஞ்சுகளை 6 வாரங்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். ஒரு மீனின் வளர்ச்சி சுழற்சி முறையில் 100 கிராம் வரையிலும் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 2000 கி.கிமும் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் மீன் வளர்ப்பில் நெற்பயிரில் கிடைக்கும் இலாபத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.