கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி மேய்ச்சல் நிலங்கள் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாமல் ஒரே இடத்தில் கட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்நடைகளைக் கட்டி வைத்திருந்த கொட்டகைகளும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக கோமாரி நோய் வேகமாக பரவியது. இந்நோய்க்கு காரணமான 'ஆப்தோ' எனும் வைரஸ் காற்றில் உள்ள ஈரப்பதத்தை (Moisture) கொண்டு பரவும் தன்மை கொண்டது.
கோமாரி நோய்த் தாக்கம் (Syphilis Disease)
கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும். நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். குளம்புகளில் ஏற்பட்ட புண்ணில் புழுக்கள் உருவாகி நடக்க முடியாமல் சிரமப்படும். இதை சரியான நேரத்தில் கவனித்து நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்கா விட்டால் சில தினங்களில் மாடு இறந்துபோகும். கடந்த 10 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. ஆயிரக்கணக்கான மாடுகள் கோமாரி நோய் தாக்கி அவதிப்பட்டு வருகின்றன.
நோய் பாதித்த மாட்டின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் (dung), பால் ஆகியவற்றின் மூலம் கோமாரி நோய் வைரஸ் வெளிப்பட்டு காற்றில் பரவி அடுத்தடுத்த மாடுகளுக்கும் நோய்த் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளும் கோமாரி நோய் தாக்கத்தால் இறந்துள்ளன.
தடுப்பூசி தட்டுப்பாடு (Vaccine Shortage)
அடுத்தடுத்து மாடுகள் இறப்பதைப் பார்த்து விவசாயிகள் செய்வதறியாது கவலை அடைந்துள்ளனர். ஆடு, மாடுகளுக்கு தொற்று நோய் பரவும் இத்தருணத்தில் கால்நடைத் துறையினர் போதிய தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருந்து தட்டுப்பாடும் இருக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சூழ்நிலையில் கால்நடை மருத்துவக் குழுவினர் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடத்தி மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன மிக அரிதான ஆடு!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!