Animal Husbandry

Monday, 10 January 2022 07:21 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் இந்த பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்ட வழிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

வீரத்தின் அடையாளம் (Symbol of heroism)

பொதுவாகத் தமிழகத்தில் ஆண்களின் வீரத்தைப் பறைசாற்றுவதற்கு, ஜல்லிக்கட்டு, மாடு பிடி போட்டி, ஏறு தழுவுதல், சிலம்பாட்டம் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். எனவே இத்தகையப் போட்டிகளின் தமிழர்களின் அடையாளமாகவேக் கருதப்படுகிறது.

பொங்கல் பண்டிகை (Pongal festival)

குறிப்பாகப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப்போட்டி மிகவும் பிரபலம். இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக்காசு, கார் உள்ளிட்ட விலை மதிப்புள்ளப் பொருட்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்படுவது வழக்கம்.

போராட்டத்திற்கு வெற்றி

ஆனால் இந்தப் போட்டிகளில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக பீடா (PETA) என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு போட்டி நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் சாலைக்கு வந்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்போதைய அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதில் இந்த சிக்கலைத் தீர்த்து வைத்தது.

சந்தேகம் (Suspicion)

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும்  பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு மற்றும் 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், போட்டி நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும்  வெளியிட்டுள்ளது.

அம்சங்கள்

  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

  • நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற வேண்டும்.

  • 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப்படுவர்.

  • போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டு பார்வையாளர்கள் நெகட்டிவ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

  • ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

  • காளையை பதிவு செய்யும் போது உரிமையாளருக்கும் பதிவு கட்டாயம், அடையாள அட்டை இல்லை என்றால் அனுமதி கிடையாது.

  • மாடுபிடி வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கோவிட் நெகடிவ் சான்று(Negative certificate) கட்டாயம்.

  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 

முன்னதாகக் கொரோனாவைக் காரணம் காட்டி, போட்டியை நடத்தக்கூடாது என 80 மருத்துவர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை, பீடா அமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.5 ஆக குறைந்த முட்டை விலை! காரணம் என்ன?

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)