விவசாயிகள் உரியக் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தினால் கால்நடை வளர்ப்புக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திட்டம் விரிவாக்கம் (Project expansion)
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கேசிசி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இது விவசாய கடன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
ஓராண்டுக்குள் (Within a year)
நடைமுறை மூலதனக்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இந்த கடன் வழங்கப்பட வேண்டும். கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
ரூ.1.60 லட்சம் கடன் (1.60 lakh loan)
விவசாயிகளுக்கு தற்போது வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ₹1.60 லட்சம் வரை தனி நபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவது போல், இதற்கு வழங்கலாம்.
வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ₹3 லட்சத்திற்கு உட்பட்டு கடன் வழங்கப்படும். பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படுகிற நடைமுறை மூலதன கடன் இரண்டும் சேர்ந்து ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2% வட்டி மானியம் (2% interest subsidy)
உரியக் காலத்திற்குள் நடைமுறை மூலதன கடனை திருப்பி செலுத்தினால் 7% வட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
சொந்த நிதியைப் பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம், வங்கிகளுக்கு 2% வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் இந்த திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் பெறுவது எப்படி? (How to get a loan?)
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீதத் தொகை கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக கிசான் கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படும்.
எனவே கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
ஆதார் அட்டை
-
வங்கி கணக்கு புத்தக நகல்
-
இரண்டு புகைப்படம்
-
நில ஆவணங்கள் நகல்
மேலேக் குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து வாரநாட்களில் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் மற்றும் சிறப்பு முகாம்களிலும் வருகிற 25.2.2022-க்குள் சமர்பிக்கலாம்.
ரூ.3 லட்சம் வரை (Up to Rs 3 lakh)
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
கால்நடை வளர்ப்போர், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூ1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) பேருதவியாக இருக்கும். கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
மேலும் படிக்க...
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!