கரூர் அடுத்த க.பரமத்தியில், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்துடன் கூடிய ஆடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை வளர்ப்பு
கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில், மானாவாரி நிலங்கள் மூலம் விவசாய வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன, அமராவதி ஆறு, மழை, கிணற்று நீரை நம்பிதான் விவசாயம் நடக்கிறது. அமராவதி ஆற்றில், தண்ணீர் இல்லாதபோது, மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது. இதனால், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் ஆடு வளர்ப்பு தொழில் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, இந்த பகுதிகளில், 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக, ஆடுகளுக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
விவசாயிகள் கோரிக்கை
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, மாவட்டத்தின் மேற்கு பகுதியான மொஞ்சனூரில் உள்ள, எல்.பி.பி., பாசன திட்டத்தை தென்னிலை வரை நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
மேலும், தட்ப வெப்பநிலை மாற்றம் காரணமாக, நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆடுகள் அடிக்கடி இறக்கின்றன. இதனால், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதனால், ஆடுகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். உடனடியாக, ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தை, க.பரமத்தியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம் - முயல் வளர்ப்பு!!