பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது. குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும். அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது. இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும் ஒன்று. ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த நோய், முதல் முறையாக இந்தியாவில் பரவிவருகிறது. அதுவும் நம் தமிழ் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய தோற்று நோயாகும் இதைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தெரிந்துகொள்வது இந்நேரத்தில் அவசியமாகிறது. மனிதர்களுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவாது
எப்படி பரவுகிறது (How it spreads)
-
கொசு, ஈ, உண்ணி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது.
-
கோடை கால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது.
-
கறவையாளர் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
-
கன்று குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போதும் நோய் தோற்று ஏற்படுகிறது.
-
இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
-
இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களின் பக்குகளில் 18 முதல் 35 நாள் வரை வாழும்.
தடுப்புமுறைகள் (Inhibitions)
-
பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி பராமரிக்கவேண்டும்.
-
சுற்றுப்புறசூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
-
தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் பாதித்த மாடுகளுக்கு தனியாக இருக்க வேண்டும்.
-
கறவையாளர் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும்.
நோய்த்தொற்றின் பாதிப்புகள் (Vulnerabilities of infection)
-
இந்த நோய்த்தொற்று 60 சதவீத மாடுகளை பாதிக்கும்
-
பால் உற்பத்தி குறையும்
-
சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.
-
தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் இடை குறைந்து காணப்படும்.
-
காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.
-
இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
-
சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
-
அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படும் ஆனால் இறப்பு சகவிகிதம் மிக குறைவு
அறிகுறிகள் (Symptoms)
-
கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை முதல் அறிகுறி
-
கடுமையான காய்ச்சல் இருக்கும் 104*
-
உடல் முழுதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும்.
-
உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து சீழ் வெளியேறும்.
-
நோய்த்தொற்றின் பாதிப்பை பொறுத்து இரண்டு முதல் நூறு கட்டிகள் உடல் முழுதும் காணப்படும்.
-
இந்த கட்டிகளின் அகலம் 0.5 - 5 செ .மி. வரை இருக்கும்.
-
நீணநீர் சுரபிகள் பெரிதாக காணப்படும்.
-
கால்கள் வீங்கி இருக்கும்
-
மாடுகள் சோர்வாக காணப்படும்.
சிகிச்சை (Treatment)
-
இந்த நோயிற்கு சிகிச்சையே கிடையாது அதனால் வரும் முன் காப்பதே நல்லது.
-
உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும் காயங்களுக்கும் தகுந்த சிகிச்சை அளித்து வந்தால் மாட்டின் உற்பத்தி திறனை தக்க வைக்கலாம்.
-
நோய் அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது
-
இதற்கான தடுப்பூசி இந்தியாவில் தற்சமயம் கிடையாது
என்ன செய்ய வேண்டும் (What to do)
-
தினசரி 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி எடுத்து அதனுடன் வெல்லம் கலந்து கொடுத்து வந்தால் நோய்த்தொற்றின் பாதிப்பை தவிர்க்கலாம்.
-
மஞ்சள்தூள், கொழுந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய் இவை மூன்றையும் கலந்து காயங்களில் பூசி வந்தால் பாதிப்பை தவிர்க்கலாம்.
-
சுத்தமான கொட்டகை, சுத்தமான மாடு சுத்தமான கறவையாளர் ஆகிய மூன்றும் நோய் பரவலை தடுக்கும்.
-
காயங்களில் ஈ மொய்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
-
கொப்பரை தேங்காய்-1 வெல்லம்- 100g வெந்தயம்-50gm மஞ்சள் தூள் -30 gm இவை அனைத்தையும் சேர்த்து உள்ளுக்கு தினமும் இரண்டு வேளை கொடுத்துவந்தால் மாடுகளுக்கு தேவயான சத்துக்கள் கிடைக்கும்.
இந்த நோய் முதல் முறையாக நம் நாட்டில் பரவி வருவதால் நாம் பண்ணை அளவில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பது இந்த நோய் பரவாமல் தடுக்கும். சுத்தமான கொட்டகை, சுத்தமான கறவையாளர், சுத்தமான மாடு இது மட்டுமே இந்த நோய்த்தொற்றில் இருந்து நம் கறவை மாடுகளை காப்பாற்றும்.
முனைவர் சா. தமிழ்குமரன்
(கால்நடை நண்பன் JTK)
கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர் /ஆராய்ச்சியாளர்
தொடர்புகொள்ள : kalnadainanban@gmail.com
மேலும் தகவலுக்கு: https://www.youtube.com/c/kalnadainanbanjtk