முயல் வளர்ப்பில் ஈடுபட நினைப்பவர்கள் அதில் உள்ள சாதக பாதக அம்சங்களை குறித்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். பெரும்பாலானோர் இறைச்சிக்காகவும், இனவிருத்திக்காகவும் வளர்க்கின்றனர். முயல் வளர்ப்பில் நல்ல லாபம் கிடைப்பதால் அனைத்து தரப்பு மக்களும் வளர்த்து பயனடையலாம்.
முயல் வளர்ப்பிற்கு சாதகமான அம்சங்கள்
முயலின் இறைச்சி மருத்துவ குணம் வாய்ந்தது. முயல் இறைச்சியில் கொலஸ்ட்ராலின் அளவு மிக குறைவாக இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இந்த இறைச்சி உகந்தது.
- முயல் ஒரு சாதுவான பிராணி என்பதால் ஆண், பெண், வயதானவர், சிறியவர் என்ற வேறுபாடு இன்றி அனைவராலும் பராமரிக்க முடியும்.
- கொல்லைப்புறத்தில் ஒரு ஆண் மூன்று பெண் முயல்களை வளர்த்து வாரம் தோறும் ஒரு கிலோ இறைச்சி உற்பத்தி செய்யலாம். இது ஒரு சிறு குடும்பத்திற்கு போதுமானது.
- கொல்லைப்புற முயல் வளர்ப்புக்கு பெரிய செலவினங்கள் ஏதும் இல்லை. சமையலறைக் கழிவுகளையும் பசுந்தீவனங்களையும் கொண்டே இவற்றை வளர்க்கலாம்.
- முயல்களுக்கு நோய் தாக்கும் அபாயம் குறைவு என்பதால் தடுப்பூசி எதுவும் போடத் தேவையில்லை.
- முயல் ஒரு பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை ஈனுகிறது.
- முயலின் சினைக்காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ளதும் ஒரு சாதகமான அம்சமாகும்.
- மிக வேகமாக வளர்ந்து விரைவில் சந்தைப்படுத்தும் எடையை அடைகின்றன.
- இவற்றின் தீவன மாற்றுத் திறனும் அதிகமாக இருக்கிறது. சமையலறைக் கழிவுகளையும் பசுந்தீவனத்தையும் இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் முயலே.
- ஒரு நபரே 500 முயல்கள் வரை பராமரிக்க முடியும் என்பதால் வேலையாட்கள் செலவு குறைகிறது.
- உயிர் எடைக்கும் உண்ணத் தகுந்த இறைச்சிக்கும் உள்ள விகிதம் அதிகமாக உள்ளது.
- முயலின் இரத்தம் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
முயல் வளர்ப்பிற்கு பாதகமான சில அம்சங்கள்
- முயல் வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது; அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும் என்ற மூடநம்பிக்கை பெரும்பாலோனோர் மத்தியில் நிலவுவதால் முயல் வளர்க்க பெரும்பாலானோரர் அஞ்சுகின்றனர்.
- முயல் பண்ணை அமைப்பதற்கு போதுமான தொழில்நுட்ப வசதிகளும் அரசின் மானிய திட்டங்களும் கிடைப்பதில்லை என்பதால் புதிதாக தொழில் தொடங்குவோர் இந்த துறையில் ஈடுபட தயங்குகின்றனர்.
- முயலுக்கான சந்தை வாய்ப்பு நிலையற்றதாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
- பெரும்பாலானோர் முயலை செல்லப் பிராணிகளை போல் பார்ப்பதால் இவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்கு பரிதாபப் படுகின்றனர். இந்த இறைச்சியை உண்ணுவதையும் விரும்புவதில்லை.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001