கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுப்பராயன்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவர் முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதோடு, முயல்களிலிருந்து மதிப்புக் கூட்டு முறையில் வருமானம் பார்த்து வருகிறார் என நமது கிரிஷி ஜாக்ரன் குழு கேள்விப்பட்டது. இதனைத் தொடர்ந்து முயல் வளர்ப்பிலுள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்வதற்காக சுரேஷ் அவர்களுடன் கலந்துரையாடியது கிரிஷி ஜாக்ரன்.
விவசாய குடும்ப பின்னணியிலிருந்து வந்த சுரேஷ் டிப்ளோமோ (EEE) படித்துள்ளார். பெரும்பாலனோர் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நிலையில் முயல் வளர்ப்பில் ஈடுபட எதனால் ஆர்வம் வந்தது என நாம் எழுப்பிய கேள்விற்கு, “ நீங்க சொல்ற மாதிரி எல்லோரும் ஆடு,மாடு, கோழினு போனால் முயல் வளர்க்க யார் இருப்பா? என்னோட குறிக்கோள் மார்கெட்ல எது இல்லையோ அதை கொண்டு வரணும் என்பது தான். முயல் வளர்ப்பு பிசினஸ் ரொம்ப நல்லா இருக்கு. வருங்காலத்தில் ஆடு,கோழி இறைச்சிக்கு இணையா முயல் கறிக்கும் தேவை அதிகமாகும். சமீப காலமாக பொது மக்களும், விவசாயிகளும் முயல் வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார்.
நியூசிலாந்து வெள்ளை இரக முயல்:
camford Rabbit farm என்கிற பெயரில் முயல் பண்ணை வைத்துள்ளார் சுரேஷ். வாடிக்கையாளர்கள் நேரில் காண்பதற்காக தனது அலுவலகத்துக்கு அருகாமையில், சுமார் 1000 முயல்கள் வரை வளர்த்து பராமரித்து வருகிறார். இதுப்போக, சுமார் 3000 முயல்கள் வரை தனியாக மற்றொரு இடத்தில் பராமரித்து வருகிறார்.
நியூசிலாந்து வெள்ளை (Newzealand white rabbit) முயல் இரகத்தை அதிகமாக வளர்த்து வருகிறார். அதற்கு காரணம் ஏன் என்று கேட்டதற்கு, “நோய் எதிர்ப்பு சக்திகள் பொதுவாகவே இவற்றில் அதிகமாக இருக்கும். இவைத்தவிர்த்து, புதியதாக கண்டுபிடிக்கும் மருந்துகளை சோதனை முறையில் எலிக்கு அடுத்து முயலில் தான் பயன்படுத்தி பார்ப்பார்கள். அந்த வகையில் நியூசிலாந்து வெள்ளை இரக முயல்களை ஹைத்ராபாத்/ பெங்களூருவிலுள்ள பரிசோதனை நிலையங்களுக்கும் நான் அனுப்பி வருகிறேன்” என்றார்.
முயல் வளர்ப்பில் இனச்சேர்க்கை:
முயலுக்கான சினைக்காலம் மற்றும் இனச்சேர்க்கை முறைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு விரிவாகவே பதிலளித்தார் சுரேஷ். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
”முயலுக்கான சினைக்காலம் 28 முதல் 31 நாட்கள். ஈன்ற முயல் குட்டி கண் முழிக்க 12 முதல் 15 நாட்கள் வரை ஆகும். மேற்படி தீவனம் உண்ண 20 நாட்கள் மேல எடுத்துக் கொள்ளும். படிப்படியாக வளரத் தொடங்கிய பின் 4-5 மாதங்களில் இனச்சேர்க்கைக்கு ஒரு முயல் தயாராகிவிடும். தற்போது 310 பெண் இனங்களும், 86 ஆண் இனங்களும் என்னிடம் உள்ளது. அதிகப்பட்சம், ஒரு வருடத்திற்கு 4 முதல் 5 முறை மட்டுமே முயல்களை இனச்சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டும். அது தான், ஆரோக்கியமானது கூட. ஏன் என்றால், ஆடு, மாடு போல் அல்லாமல்- முயல்கள் ஒரே நேரத்தில் குறைந்தது 5, அதிகப்பட்சம் 12-15 வரை குட்டி போடும்.”
”வருடத்திற்கு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக இனச்சேர்க்கை மேற்கொண்டால் உயிரிழப்பு தன்மை அதிகரிக்கக்கூடும். முயல்கள் பொதுவாகவே பாலூட்டும் இனம். அப்படியிருக்கையில், தாய் முயல் ஆரோக்கியமாக இல்லையென்றால் குட்டிகளின் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாக மாறிவிடும்” என்றார்.
(மேலும் விரிவான நேர்க்காணல் தொகுப்பு – அடுத்த கட்டுரைகளில் வெளியாகும்)
Read also:
Pig farming- பன்றிகளுக்கு விதைநீக்கம் எப்போது செய்யலாம்?
மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?