நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மெகா கால்நடை மருத்துவ முகாம்:
நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியம் மசினகுடி மற்றும் கூடலூர் ஒன்றியம் தேவர்சோலை ஆகிய கிராமங்களில் முறையே 27.06.2023 மற்றும் 12.07.2023 தேதிகளில் "சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்”நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் தாது உப்புகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் 3 சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு அதில் சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தவறாது கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
புருசெல்லோசிஸ் தடுப்பூசி முகாம்:
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 15.06.2023 முதல் 14.07.2023 வரை இரண்டாம் தவணை "கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது. புருசெல்லோசிஸ் (கன்று வீச்சு நோய்) என்பது பசு மற்றும் எருமைகளுக்கு கருசிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும் சினை ஈன்றும் தருவாயில் (4 மாதம் முதல் 8 மாதம் கர்ப்ப பருவத்தில்) கரு சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோயினால் நஞ்சு கொடி தங்குதல் மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நோய் ஏற்பட்ட மாட்டின் நஞ்சு கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக இரண்டாவது தவணையாக புருசெல்லோசிஸ் எனப்படும் கன்றுவீச்சு நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் 15.06.2023 முதல் 14.07.2023 வரை இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
இதனை நீலகிரி மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டு பயன்பெறவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
pic courtesy : Ref image (insta news)
மேலும் காண்க: