பாட்னாவில் உள்ள பீகார் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Bihar Animal Sciences University- BASU) விளையாட்டு மைதானத்தில் 3 நாள் (டிச 21- 23) பால் பண்ணை மற்றும் கால்நடை கண்காட்சியை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி வைத்து நல்லப்படியாக நிறைவுற்றது.
ஆனாலும், இன்றும் அக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்த கோலு-2 என்கிற முர்ரா எருமை பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளம் முழுவதும் நிறைந்துள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த கோலு-2 முர்ரா எருமைக்கு என கேட்டால், ஒரு நீண்ட பட்டியலை தருகிறார்கள். அதைக்கேட்டால், கால்நடை வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ள நபர்கள் திக்குமுக்காடி போய்விடுவார்கள். அந்த மாட்டின் இன்றைய மதிப்பு ரூ.10 கோடி என்றால், நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.
மாதம் மாதம் ரூ.8 லட்சம் வரை வருமானம் தருகிறது கோலு-2 முர்ரா எருமை. ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த இந்த மாட்டின் வயது என்னமோ வெறும் ஆறு வயது தான். இந்த மாட்டினைப் பராமரிக்க 30 கிலோகிராம் பசுந்தீவனம், எட்டு கிலோகிராம் வெல்லம் மற்றும் உலர் தீவனம், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு முறை வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, எருமை தனது வலுவான உடலமைப்பைத் தக்கவைக்க தினசரி பத்து லிட்டர் வரை பாலை உட்கொள்கிறதாம்.
15 குவிண்டால் எடையும், ஐந்தரை அடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட கோலு-2 முர்ரா எருமை, பெரிய பணக்காரர்களுக்கு இணையான ஆடம்பர வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறது. தினசரி கடுகு எண்ணெய் மசாஜ்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட அறையில் தான் சுகமாக உலாவுகிறது முர்ரா எருமை. இதனை கவனிப்பதற்கென்றே 4 பேர் கொண்ட பிரத்யேக குழு ஒன்றும், வேலை செய்து வருகிறது.
இந்த மாட்டின் உரிமையாளர் பானிப்பட்டைச் சேர்ந்த விவசாயி நரேந்திர சிங் என்பவர் ஆவார். இதன் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே மாதம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவிடுவதாக ஆச்சரியத்தை தருகிறார் நரேந்திர சிங்.
பீகார் அரசின் வேண்டுக்கோளுக்கிணங்க, இந்த மாட்டினை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதுக்குறித்து விவசாயி நரேந்திர சிங்கின் நெருங்கிய தோழரான அஜீத் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “நாங்கள் அரசு கேட்டுக்கொண்டதால், இதனை காட்சிப்படுத்தினோம். இது என்ன மாதிரியான மாடு என்று பார்க்கவே பல்வேறு கால்நடை விவசாயிகள் நிகழ்வுக்கு வருகைத் தந்திருந்தனர்” என்றார்.
ஹரியானவினை சேர்ந்த பிரவீன் ஃபௌஜி தெரிவிக்கையில், “முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமைகளிலேயே இந்த கோலு-2 எருமை தனித்தன்மை வாய்ந்தது. தினசரி 26 லிட்டர் பால் கொடுத்த சமூக வலைத்தளம் மற்றும் விவசாயிகள் மத்தியில் பிரபலமான பிசி483- ராணி ஆகியவற்றின் கன்று தான் இந்த கோலு-2” என்றார்.
கோலு-2 எருமை மாட்டினைத் தவிர, இனிப்புகள், நம்கீன், பிஸ்கட், ரொட்டி மற்றும் குடிநீர் (சுதா சலில்) போன்ற ஐந்து புதிய தயாரிப்புகள் உட்பட COMFED-இன் ஐந்து பால் ஆலைகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more:
விதை வாங்கும் போது இதை நோட் பண்றீங்களா? விவசாயிகளின் கவனத்திற்கு
PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!