வெள்ளை ஈ
தக்காளியில் அதிக சேதாரத்தை தரக் கூடியது வெள்ளை ஈ. பெவிசியாடபாசி என்ற இந்த வெள்ளை ஈ இளம்பருவம் மற்றும் வளர்ந்த பூச்சிகளும் தக்காளி செடியின் தண்டுப் பகுதியில் சாற்றை உறிஞ்சி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. ஈ தாக்கிய பின்னர் இலைகள் மஞ்சள் நிறமாகி சுருங்கி காய்ந்து கீழே விழுகின்றன. வெள்ளை ஈ சுரக்கும் தேன் நிறத்திலான திரவம் கரும் பூசாண படலமாக தோன்றி செடிகள் வளர்ச்சி தடைப்படும். மேலும் தக்காளி செடியில் இலை மடக்கு நோயை பரப்புகின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள்
- தாக்குலுக்குள்ளான செடியில் இலைகள், இளம் நிலை பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
- வெள்ளை ஈக்கான உணவு செடிகளான அபுட்டிலான், அகாலிபா, இர்போபியா செடிகளை அகற்ற வேண்டும்.
- மஞ்சள் ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 15 இடங்களில் வைக்க வேண்டும். இதில் முதிர்ச்சியடைந்த வெள்ளை ஈக்கள் ஒட்டிக்கொள்ளும்.
இலைப்பேன்
இலைப்பேன் இளம் மற்றும் வளர்ச்சியடைந்த செடிகளில் இலைகளில் சாற்றை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால், இலைகளில் வெளிர்நிற திட்டுக்கள் தோன்றி, நாளடைவில் செடியிலுள்ள இலைகள் முழுமையாக வெளிர் நிறமடைந்து செடி கருகத் தொடங்கி விடும். இதன் தாக்குதல் கோடை பருவத்தில் அதிகம் காணப்படும். இளம் செடிகளானால், இதன் தாக்குதலில் செடிகளின் வளர்ச்சி குன்றி பூ காய்கள் பிடிப்பதில்லை. தீவிர தாக்குதல் காணப்பட்டால் செடிகள் பழுப்பு நிறமாகிவிடும். மேலும் இச்செடி மிளகாய் பயிரில் இலை சுருட்டு நோயை பரப்பும் காரணியாகச் செயல்படும். இலைப் பேன் தக்காளி செடியில் மொட்டு கருகல் நோயையும் பரப்புகிறது.
கட்டுப்படுத்தும் வழிகள்
- இளம் நாற்றங்காலில் நீரை வேகமாக தெளித்து இலைப்பேன் பெருக்கத்தை குறைக்கலாம்.
- நாற்று நடவின்போது, போரேடே குருணை மருந்தை ஏக்கருக்கு முக்கால் கிலோ செடிகளின் அடியில் தூவலாம்.
- நாற்று செடியின் வேரை 5 சதம் மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.
- மேலும், இமிடாகுளோபரிட் இருநூறு எஸ். எல். இருநூற்றி ஐம்பது மில்லி அல்லது தயோக்குளபரிட் இருநூற்றி நாற்பது எஸ். எல். 225 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு ஸ்பிரே செய்து கட்டுப்படுத்தலாம். மீதைல் டெமட்டான் 5 சதம், டைமீத்தோயேட் 6 சதம், பாஸ்லோன் 7 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
பச்சை காய் புழுக்கள்
பச்சை காய் புழுக்கள் தக்காளி செடியில் காய்கள் பழங்களைத் துளையிட்டு உட்புறச் சதையை தின்று சேதப்படுத்துகின்றன. இப்பூச்சிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள தக்காளிச் செடி பூக்கும் பருவத்தில் இனக் கவர்ச்சிப் பொறிகள் ஏக்கருக்கு 5 இடங்களில் வைக்க வேண்டும். அந்துப்பூச்சிகள் தக்காளிப் பயிரில் முட்டையிடுவதைத் தவிர்க்க 4 நாளான தக்காளி தோட்டத்தில் கேந்தி என அழைக்கப்படும் மேரி கோல்டு நாற்றுக்களை பொரிப் பயிராக ஆறு வரிசைக்கு ஒருவரிசை நட வேண்டும்.
மேரிக்கோல்டு செடிகளால் அந்திப்பூச்சிகள் கவரப்பட்டு அதில் முட்டையிடும். முட்டைகளையும், இளம் புழுக்களையும் மேரி கோல்டு செடியிலிருந்து சேகரித்து அழித்துவிடலாம். தக்காளி பழத்தில் 1 சதத்துக்குமேல் சேதம் காணப்பட்டால், நன்மை செய்யும் பூச்சிகளான டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 5 ஆயிரம் என்ற அளவில் வாரம் ஒருமுறை தோட்டத்தில் அட்டைகளை கட்டினால், அதிலிருந்து வரும் பூச்சிகள் முட்டைகளை அழித்துவிடும். சேதாரம் அதிக அளவில் இருந்தால் கார்பரில் 2 கிராம், குயினால்பாஸ் 2.5 மில்லி பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 2 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
புரொடினியா புழு
பச்சைக் காய்ப் புழுவைப் போல காய்களையும் இலைகளையும் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துவது புரொடினியா புழு. இப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு இரு இடத்தில் விளக்குப் பொறிகள் மாலை நேரத்தில் வைக்க வேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்குச் செடிகளை வளர்க்க வேண்டும். பெரும்பாலான பூச்சிகள் ஆமணக்கு இலைகளில் முட்டைகளை இடும். முட்டை குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்தும் அழிக்கலாம்.
நச்சுத் தீனி- ஹெக்டேக்ருக்கு 12 கிலோ அரிசித் தவிடு, சர்க்கரை ஒன்னரை கிலோ, கார்பரில் மருந்து 1.25 கிலோ இவற்றை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, வயல் பரப்பை சுற்றிலும் வைத்தால் இரவில் புரொட்டினியா புழுக்கள் இதைத் தின்று அழியும்.
வாடல்நோய் மேலாண்மை
செடிகளின் இளம் இலைகள் வாடி கருகத் துவங்கும். சில தினத்தில் இலைக் காம்பும் அனைத்து இலைகளும் வாடத் தொடங்கும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமடைந்து மற்ற இலைகளிலும் பரவும். நாற்றின் தண்டில் திசுக்கள் பழுப்பு நிறமடைந்து பயிர் வளர்ச்சி குன்றி மடியும்.
பயிர் சுழற்சி முறையில் தக்காளி தோட்டத்தில் தானியப் பயிர்களை பயிரிட வேண்டும். பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட செடியில் வேர் நனையுமாறு கார்பன்டைசிம் .1 சதம் மருந்து கரைசல் ஊற்ற வேண்டும். இதனால், வாடல்நோயை கட்டுப்படுத்தலாம்.
இலைக் கருகல் நோய்
இலைகளைச் சுற்றிலும் வெளிர் மஞ்சள் நிற வளையம் காணப்படும். இப்புள்ளிகள் கருகி இலைகள் உதிர்ந்துவிடும். தண்டுப் பகுதியிலும் இத்தகைய புள்ளிகளைத் தொடர்ந்து கருகல் நோய் ஏற்படும்.
தோட்டத்தில் பயிர் சுழற்சி முறையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பயிர் கழிவுகளை அகற்றுவன் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்கலாம். டைத்தேன். எம்.45 பூஞ்சான கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் அளவில் கலந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும். தக்காளி செடிகளில் காணப்படும் மேற் கூறிய அறிகுறிகளை கண்காணித்து பூச்சி, நோய்களின் தாக்குதலில் உள்ள வேறுபாடுகளை விவசாயிகள் உணர்ந்து சூழ்நிலைக்கேற்றவாறு மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.