கோழி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்றால் முறையான பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான தீவனம் அவசியமாகும். முட்டையிடும் தன்மை குறைவாக உள்ள கோழிகளை வளர்பதினால் எந்த பலனும் இல்லை. இது போன்ற கோழிகளை இறைச்சிக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்தியா பிராய்லர் இறைச்சி (உடல் எடை) உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 4.2 மில்லியன் டன்களாக இறைச்சி உற்பத்தியிலும், முட்டை உற்பத்தியில் 88 பில்லியனைத் தாண்டி, உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக முட்டைகளை பெறுவதற்கு குஞ்சு பொரித்த முதல் நாளிலிருந்தே அவைகளை தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். மேலும் அடிக்கடி நோய் ஏற்படும் கோழிகளை தனியாக பிரித்தெடுப்பது மற்ற கோழிகளுக்கு நன்மை அளிப்பதாகும். இத்தகைய கோழிகளால் முட்டைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஆரோக்கியமான கோழியை தேர்ந்தெடுக்க, இந்த முறைகள் அவசியம்
அதிக முட்டை இடும் கோழிகள்:
- இந்த கோழிகள் எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
-கூடுதலான தீனியை உட்கொள்ளும் மற்றும் உடல் வடிவம் சதுர அமைப்பில் அமைந்திருக்கும்.
- பொதுவாக அதிக முட்டையிடும் கோழிகளின் அலகு, தொடை, மற்றும் தோல்கள் போன்ற பகுதிகள் வெண்மை நிறத்தில் காணப்படும். இத்தகைய தன்மைகளை கொண்டு அதிக முட்டையிடும் கோழிகளை அறிந்து கொள்ளலாம்.
-கோழியின் தோல்களுக்கு கீழுள்ள மஞ்சள் பகுதி முட்டையின் மஞ்சள் கருவை உருவாக்க பயன்படுகிறது.
-இவ்வகை கோழிகள் இறகுகளை வெளியேற்றும் பணியை தாமதமாக செய்தாலும், ஒரே சமயத்தில் இறகுகளை வெளியேற்றி பின்பு முட்டையிடும் பணியை துவங்குகிறது.
குறைவாக முட்டையிடும் கோழிகள்:
-ஆரோக்கியம் குறைந்த கோழி சோர்ந்து அமைதியாக இருக்கும்.
-உடல் அமைப்பு முக்கோண வடிவில் அமைந்திருக்கும்.
-முட்டை அதிகம் இடாதா கோழிகளின் அலகு, தோல்,தொடை, பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
-ஆரோக்கியம் குறைந்த கோழிகள் விரைவாக இறகுகளை வெளியேற்றும் பணியை துவங்கி பின் வெளியேற்றும் பணியை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன.
இவ்வாறு கோழிகளின் வேறுபாடுகளை கண்டறிந்து ஆரோக்கியமற்ற கோழிகளை பிரித்தெடுத்து, அதிக முட்டை பெறுவதற்கு நல்ல கோழிகளை மட்டுமே வளர்க்கவும்.
கோழிகளுடன் முட்டையையும் தேர்வு செய்வது கோழி வளர்ப்பில் முக்கியமாகும். ஒரு முட்டையில் உடலுக்கு தேவையான பூரண சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டையின் அளவு தாண்டி இன்னும் மேலும் பல தன்மைகள் கண்டறிவது முக்கியமாகும்.