Animal Husbandry

Friday, 26 April 2024 02:28 PM , by: Muthukrishnan Murugan

maintenance of cattle shed

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்ப அலையில் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பராமரித்திட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி கால்நடை விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழுவிவரம் பின்வருமாறு: கோடையில் அதிக வெப்ப தாக்கத்தின் காரணமாக கறவைமாடுகளின் உடல் வெப்பநிலை உயர்ந்து சோர்வு ஏற்படும். இதனால் குறைந்த அளவு தீவனம் உட்கொள்வதுடன் பால் கறக்கும் திறன் மற்றும் உடல் வளர்ச்சி குறைந்திட வாய்ப்பாக அமையும் என்பதால் கோடைகாலங்களில் கறவை மாடு வளர்ப்பில் கூடுதல் பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொட்டகைக்கு வண்ணம் தீட்டும் முறை:

கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் மட்டுமே கட்டி பராமரித்திட வேண்டும். மேலும், கால்நடை கொட்டகையில் கறவை மாடுகளுக்கு காற்றோட்டமான சரியான இடவசதி அமைந்திருப்பதுடன், கொட்டகையில் பக்கவாட்டில் ஈரமான கோனிப்பைகளை கட்டுவதன் மூலம் வெப்பதாக்கத்தை குறைக்கலாம். குடிநீர் தொட்டியினை கொட்டகையினுல் அமைப்பதன் மூலம் குடிநீர் வெப்பம் அடையாமல் தவிர்க்கலாம். கொட்டகையில் அஸ்பெஸ்டாஸ், அலுமினிய கூரைகளின் உள்பகுதியில் கருப்பு வர்ணம் மற்றும் வெளிப்புறத்தில் வெண்மை வர்ணம் அடிப்பதால் கொட்டகையினுல் வரும் சூரிய கதிர்களை குறைக்க முடியும்.

மேலும், கறவை மாடுகளை காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லலாம். மதிய நேரங்களில் பசுந்தீவனமும், மாலை அல்லது இரவு நேரங்களில் உலர் தீவனமும் அளிக்கலாம்.

தீவனமுறைகள் எப்படி?

கோடைகாலங்களில் கலப்பு தீவனத்துடன் 40 கிராம் என்ற அளவில் தாது உப்பு கலவை 150 கிராம் சோடியம் பைகார்பனேட் சேர்த்து கொடுக்கலாம். பசுந்தீவனம் கிடைக்காத சூழ்நிலையில் வைக்கோல் மற்றும் சோளத்தட்டு ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீர் தெளித்து வழங்குவதால் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும். உலர் அல்லது பசுந்தீவனம் 60 பங்குடன், கலப்பு தீவனம் 40 பங்கு கலந்து முழு கலப்புத் தீவனமான கால்நடைகளுக்கு வழங்கியும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம்.

கறவைமாடுகள் குறைவான அளவில் நீரை அருந்தும் போது உணவு செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் வெப்பநிலை அதிகரித்து சோர்வும், தளர்ச்சியும் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. பொதுவாக கறவையில் உள்ள பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை குடிநீர் அளிப்பது அவசியமாகிறது.

அதேபோன்று, ஆடு மற்றும் கோழிக்களுக்கான கோடைகால பராமரிப்பு முறைகள் குறித்து தங்கள் அருகாமையில் கால்நடை மருத்துவமனைகளை அணுகி பராமரிப்பு முறைகளை முழுமையாக கடைபிடித்து தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Read more:

கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் முன்னுரிமை!

மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)