காடை வளர்ப்பு
காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
காடை இனங்கள்
-நியூசிலாந்து காடை
-பாப் வெள்ளைக் காடை
-சைனாக் காடை
-மடகாஸ்கர் காடை
-கலிபோர்னியா காடை
-நியூகினியா காடை
-ஜப்பானிய காடை
ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை
காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.இந்த காடை வளர்ப்பு இரு வகைப்படும், ஒன்று தரையில் அதாவது ஆழ்கூள முறை மட்டொன்று கூண்டு முறை.
ஆழ்கூள முறை
ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின்பு கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.
கூண்டு முறை
இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பி வலைக்கடியில் தகடுகள் பொருத்த வேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம். குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்பட வேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
காடைத்தீவனம்
காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப் படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம். ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இனப்பெருக்கம்
காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவைத்த 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.