குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது. முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு.
நிலமற்ற விவசாயிகள், வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
இனங்கள்
சின்செல்லா
இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம்
இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
சாம்பல் நிற ஜெயிண்ட்
இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், எடை 4.5-5 கிலோ கிராம் வரை இருக்கும். இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது உரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
நியூசிலாந்து வெள்ளை
இவ்வினம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறம், தோல் நிறமற்றது. மெலனின் நிறமி இல்லாததால் கண்ணின் நிறம் சிவப்பாக இருக்கும். 4-5 கிலோ எடையுடன் இது இறைச்சி மற்றும் உரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது.
வெள்ளை நிற ஜெயிண்ட்
இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். உரோமம் வெள்ளை நிறத்துடனும், தோலும் கண்களும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஆனால் உடல் சற்று நீளமாகக் காணப்படும்.
அங்கோரா
3 கிலோ மட்டுமே எடைகொண்ட பழங்காலத்திலிருந்து வளர்க்கப்படும் சிறிய இனம் ஆகும். கம்பளி தயாரிக்க உதவும் வெள்ளை நிற உரோமங்களுடன் கூடியது. ஒரு வருடத்திற்கு 3-4 முறை உரோமம் கத்தரிக்கலாம். 300-1000 கிராம் அளவு உரோமம் கிடைக்கும்.
கலப்பு இனங்கள்
மேலே கூறப்பட்ட அயல்நாட்டு இனங்களுடன் உள்ளூர் இனங்கள் கலப்பு செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாகின்றன. கேரள தட்பவெப்ப நிலைக்கு இவ்வினம் மிகவும் ஏற்றது. எடை 4-4.5 கிலோ இருக்கும். உரோமங்களின் நிறம் ஒவ்வொரு முயலுக்கும் வேறுபடும்.
தீவனப் பராமரிப்பு
முயல்களின் தீவனத் தேவை
முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும். பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.
பயிரிடப்படும் தீவனப்பயிர்களான அகத்தி, கினியாடெஸ்மான்தஸ். லூசர்ன், போன்றவையும் பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளையும் கொடுக்கலாம்.
மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
முயல்களுக்கான தீவன அளவு அட்டவணை
முயல்கள் |
உடல் எடை (தோராயமாக) |
நாளொன்றுக்குக் கொடுக்கவேண்டியது |
|
அடர் தீவனம் |
பசும்புல் |
||
ஆண்முயல் |
4-5 கிலோ |
150 கிராம் |
600 கிராம் |
பெண் முயல் |
4-5 கிலோ |
150 கிராம் |
600 கிராம் |
சினை முயல்கள் |
- |
200 கிராம் |
700 கிராம் |
வளரும் முயல்கள் |
600-700 கிராம் |
50 கிராம் |
200 கிராம் |
இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்திற்கான முயல்களைத் தெரிவு செய்தல்
நல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்துதான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.
முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்
-
முயல் நச்சுயிரி நோய்
வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது. இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். சில நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
- பாஸ்சுரேல்லா நுண்ம நோய்
பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா) மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின் போன்ற மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
- கோழை குடல் அழற்சி
எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும். சிறந்த தடுப்பு முறைகள் ஏதுமில்லை.
- காது சொறி
நோய்க்காரணி: சோரோஃபீட்ஸ், குனிகுளி. தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழிதல் போன்றவை அறிகுறிகளாகும். காதை சுத்தப்படுத்திய பிறகு பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல் ) மருந்தினை அளிக்க வேண்டும் .
- உருளை நாடா
நோய்க்காரணி: பூஞ்சான் (டிரைக்கோபைட்டான் மைக்ரோஸ்போரான்) அறிகுறி - முடிகள் உடலின் சில பகுதிகளிலிருந்து உதிர்ந்து விடுவதால் அங்கங்கே சொட்டையாகக் காணப்படும். கிரிசியோஃபல்வான் என்ற மருந்தினை அளிக்க வேண்டும்.
நோயினைத் தடுக்க முயல் பண்ணை சுகாதாரம்
- முயல் பண்ணையானது உயரமான இடத்தில் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
- முயல் கூண்டுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- முயல் கொட்டகையினை சுற்றி மரங்கள் இருப்பது அவசியம்.
- முயல் கொட்டகைக்கு வருடம் இரு முறை சுண்ணாம்பு பூச வேண்டும்.
- வாரம் இரு முறை கூண்டுகளுக்கு கீழே சுண்ணாம்புக் கரைசலை தெளிக்க வேண்டும்.
- கோடைக்காலங்களில் கூண்டுகளின் மேலும் முயல்களின் மேலும் நீர் தெளித்து கொட்டகையின் வெப்பத்தை குறைத்தால் அதிக வெப்பத்தால் முயல்களில் ஏற்படும் இறப்பினை தவிர்க்கலாம்.
- நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை முயல்களுக்கு குறிப்பாக குட்டி போட்ட மற்றும் இளவயது முயல்களுக்கு கொடுக்க வேண்டும்.
- பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த டெட்ராசைக்கிளின் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் வீதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும்