மாதம் 20,000 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியைப் பெற, மக்கள் தலா 10 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கொடுக்க முன்வந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எல்லாம் அரசு வேலை மீதுள்ள ஆர்வம் மட்டுமல்ல, போட்ட பணத்தை, சில ஆண்டுகளில் எடுத்துவிடலாம் என்றத் தவறானக் கொள்கையுமே, இவர்களை இந்த மோசடிக்குள் சிக்க வைத்துள்ளது.
எந்தக் காலமானாலும் சரி, அரசு உத்தியோகத்திற்கு எப்போதுமே மவுசுதான். பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்டச் சலுகைகள்தான், அரசுப்பணியின் பக்கம், மக்களைக் கவர்ந்து இழுக்கிறது. மக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக்கொண்டு, காசு பார்க்கும் ஆசையில், பலக் கரைவேட்டிகள், இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளன. அதாவது, 150க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.10 லட்சம் வசூல் வேட்டை நடந்திருக்கிறது.
பெரம்பலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில், 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதை நிரப்ப 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 30 வயது உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, சுமார் 400 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்முகத்தேர்வு, கால்நடை பராமரிப்புத்துறை பெரம்பலுார் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.
விளையாடிய லஞ்சம் (Bribery played)
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஆளுங்கட்சியினரை நேரில் அணுகி, தங்களுக்கு வேலை வாங்கித் தர கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்களிடம், ஆளும் கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இப்பணிக்கு 10 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். 18 பணி இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆளும் கட்சியினர் சுமார் 150க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சம் ரூபாயை வேலை வாங்கித் தருவதாக அவர்களுக்குக் உத்தரவாதம் கொடுத்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் வேட்டை
சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் வேலை கிடைத்தால் போதும் என 10 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியினரும் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?