கோழிப்பண்ணை அமைக்க 1.66 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதால், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இந்த மாதம் 10ம் தேதி கடைசி தேதியாகும்.
விவசாயம் பொய்க்கும் காலங்களில், விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் தொழிலாகக் கருதப்பட்ட கோழி வளர்ப்பு தற்போது பிரதானத் தொழிலாகவே மாறி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பலர், கோழிப்பண்ணை அமைத்து, ஆர்கானிக் கோழிகளை உருவாக்கி, நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோருக்கு அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மானியம் எவ்வளவு?
விருதுநகர் மாவட்டத்தில் 2022-2023 நிதியாண்டில் தமிழக அரசு சார்பாக கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் கொண்ட யூனிட்) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 7 முதல் 13 பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.3,33,750 ஆகும். இதில் 50 சதவீதம் மாநில அரசு மானியம் (ரூ.1,66,875), 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை (ரூ.1,66,875).
தகுதி
-
கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
-
இடத்தின் சிட்டா அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் .
-
கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
-
2012-2013 முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை தொடர்பான எந்த ஒரு திட்டங்களிலும் பயன்பெற்றிருக்கக் கூடாது.
-
பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.
-
பயனாளியின் பங்குத் தொகையை, வங்கி கடனாகவோ அல்லது சொந்த முதலீடாகவோ அளிக்க வேண்டும்.
-
50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
முன்னுரிமை
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
காலக்கெடு
விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.
தகவல்
ஜெ.மேகநாத ரெட்டி
மாவட்ட ஆட்சித்தலைவர்
விருதுநகர்
மேலும் படிக்க...