புதுவையில், கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரை கால்நடை விவசாயிகள் கடன் பெறலாம் என்று கால்நடை துறை அறிவித்துள்ளது.
கிசான் கடன் அட்டை (Kisan Credit Card)
இது தொடர்பாக கால்நடைத்துறைச் செயலாளர் ரவிபிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிசான் கடன் அட்டை (Kisan Credit Card) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
3,000 விவசாயிகளுக்கு (For 3,000 farmers)
பாண்லே கூட்டுறவு ஒன்றியம், ஊரக வளர்ச்சி முகமை, கால்நடை பராமரிப்பு, மற்றும் கால்நடை நலத்துறை மூலமாக பசு - எருமை வளர்க்கும் 3,000 விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் இந்த ஆண்டு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களில் இரு கறவைப் பசுக்கள் வளர்ப்பவர்களுக்கு ரூ. 30,000 மற்றும் இரு உயர் ரக முர்ரா இன எருமைகள் வளர்ப்பவர்களுக்கு ரூ.42,700 என்ற விகிதத்தில், அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை ஒவ்வொருவருக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7% வட்டி (7% interest)
கடனாகப் பெறும் இந்தத்தொகைக்கு, 7 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். அதேநேரத்தில் கடனை தவறாமல் திருப்பிச் செலுத்தும் கால்நடை விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டியில் மானியமும் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
புகைப்படம்
-
ஆதார் அட்டை
-
ரேஷன்கார்டு
-
வங்கிக் கணக்குப் புத்தகம்
எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை, மேலேக் கூறிய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து, இன்று முதல் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில், கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers happy)
கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, மிகக்குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் கொடுப்பது குறித்த இந்த அறிவிப்பு, கால்நடை விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!