மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 June, 2019 3:41 PM IST

கால்நடைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஆடு, மாடு, கோழி, வாத்து போன்றவைகளாகும். ஆடு வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளாடுகளையே தேர்ந்தேடுத்து வளர்ப்பார்கள். செம்மறி ஆடுகளைப் பட்டி அடைத்து வளர்க்க வேண்டும், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற காரணங்களினால் செம்மறி ஆடுகள் பண்ணைகளில் வளர்ப்பது குறைவுதான். ஆனால் செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்ட பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டிகளில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.

கொட்டகை பராமரிப்பு      

ஆட்டுக் கொட்டகைக்கு மண் தரையே போதுமானது. தினம் ஒரு முறை சுத்தமாக கூட்டி சாணத்தை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆடுகளின் சாணம் வறண்டே இருப்பதால் கூட்டி அள்ளுவது சுலபம். சிறுநீரின் அளவும் குறைவே என்பதால், மண் தரை அதனை உறிஞ்சிக்கொள்ளும். கொட்டகை முறையில் ஆடுகள் வளர்ப்போர், கொட்டகையில் உள்ள ஈரம் உலரும்படி செய்ய பகலில் ஆடுகளை திறந்த வெளிப்பகுதியில் மேய விடலாம். தினமும் அள்ளப்படும் சாணத்தை எருக்குழியினில் சேமித்து வைத்து தேவைப்படும்போது உரமாகப் பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்து விடலாம்.

ஆடுகளுக்கான தண்ணீர் மற்றும்  தீவனத் தொட்டிகள், சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட வட்ட வடிவிலான அல்லது நீள்செவ்வக வடிவிலான தொட்டிகளாக இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உட்பக்கம், சுண்ணாம்பு அடிக்கவேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை.

ஆட்டுக் கொட்டகையில் பேன்கள், உண்ணிகள், தெள்ளுப்பூச்சிகள் ஆகியவை அதிகம் காணப்பட்டால் கிருமி நாசினி (சுமத்தியான், மாலத்தியான், பியூடாக்ஸ்) கொண்டு மருந்தடிக்கலாம். குட்டிகளை அடைக்கும் கொட்டகையில் ஒவ்வொரு குட்டியீனும் பருவத்திற்கு முன்பு மண் தரையை லேசாக சுரண்டி அகற்றி புதிய மண் கொட்டுவது நல்லது. இது கழிச்சல், நிமோனியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

மேய்ச்சல் முறை

ஒரு எக்டேருக்கு சுமார் 10 ஆடுகள் வரை வளர்க்கலாம். காலநிலையைப் பொறுத்தே மேய்ச்சலின் நேரம் அமைகிறது. வெயில் காலங்களில் காலை 10  மணி முதல் மாலை 5  வரை மேய்ச்சலுக்கு கூடி செல்ல வேண்டும். பனி காலங்களில் காலை 11  மணி அளவில் மேய்ச்சலுக்கு கூட்டி செல்லவெம்ண்டும். மேலும் இக்காலங்களில் குளிர் தண்ணீரால் ஆடுகளுக்கு சளி பிடித்து நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தீவனம் மற்றும் நீர் காட்டுவதில் கவனம் வேண்டும். மழை காலங்களில் 7  மணி நேர மேய்ச்சல் மட்டுமே இருக்க வேண்டும், காரணம் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் துள்ளு போன்ற  நோய் ஏற்படும். எனவே மேய்ச்சலில் கவனம் வேண்டும்.  

செம்மறி ஆட்டு  இனங்கள்

செம்மறியாடுகளை முக்கியமாக அவை தரும் பயன்களின் அடிப்படையில் ‘இறைச்சியின ஆடுகள்’ எனவும், ‘கம்பளியிழையின ஆடுகள்’ எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் இறைச்சியின செம்மறியாடுகளே அதிகமாக உள்ளன.கம்பளியிழை தரும் செம்மறியாடுகள், முக்கியமாக கம்பளியிழைக்காக மட்டுமே வளர்க்கப் பட்டாலும் இறைச்சியும் தருகின்றன.

இறைச்சியின ஆடுகள்

1. மேச்சேரி

இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை.

இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. இதன் தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மேலும் மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம்.

2. சென்னை சிவப்பு

இந்த இனம், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகிறது. இதன் நிறத்தைக் கொண்டே சென்னை சிவப்பு எனக் கூறுகிறோம்.

இந்த இன கிடா ஆடுகளுக்கு நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும், பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.

3. கீழக்கரிசல்

இவை இராநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் காணப்படுகின்றன. கோடைக் காலங்களில் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் செல்வதால் இந்த ஆடுகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் காணப்படும். இந்த இன ஆடுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கீழ்த்தாடை, மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் கருப்பு நிறம் காணப்படும். கிடா ஆடுகளுக்கு நீண்ட,  திருகிய கொம்பு இருக்கும்.  பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.

4. இராமநாதபுரம் வெள்ளை

இந்த வகையான ஆடுகள், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இவ்வின ஆடுகளில் தலை மற்றும் கால் பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். கிடா ஆடுகளின் கொம்புகள் தடித்து திருகி இருக்கும். பெட்டை ஆடுகளுக்கு கொம்பு இருக்காது.

5. வேம்பூர்

இந்த இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை மற்றும் நாகலாபுரம் ஊர்களிலும், புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தச் செம்மறியாடுகள், வெள்ளை நிறத்துடன் பழுப்பு அல்லது சிவப்பு நிறத் திட்டுகள் கொண்டிருக்கும். இவற்றின் உயரம், மற்ற தமிழ்நாட்டு இனங்களை விட அதிகம். கிடாக்கள் திருகிய கொம்புடனும், பெட்டையாடுகள் கொம்பு இல்லாமலும் காணப்படும்.

கம்பளியிழையின ஆடுகள்

இதனை ‘குரும்பை ஆடு’ எனக் கூறுவர். இந்த இனம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்டது. இது வெள்ளை நிறத்துடனும், முகம், காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு நிறம் கலந்தும் காணப்படும். இதன் உரோமம் விரிப்புக் கம்பள உரோம வகையைச் சார்ந்தது. இது கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது.

கம்பளியிழையின ஆடுகள்

இதனை ‘குரும்பை ஆடு’ எனக் கூறுவர். இந்த இனம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்டது. இது வெள்ளை நிறத்துடனும், முகம், காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு நிறம் கலந்தும் காணப்படும். இதன் உரோமம் விரிப்புக் கம்பள உரோம வகையைச் சார்ந்தது. இது கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது.

1. திருச்சிக் கருப்பு

இந்த இன ஆடுகள் பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்ப கருப்பாக இருக்கும்.  இதன் உரோமம் விரிப்புக் கம்பளி ரோம வகையைச் சார்ந்தது.

2. நீலகிரி

இந்த இன ஆடுகள் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும். இவை வெள்ளை நிறமாக இருக்கும். பழுப்பு நிறத்தில் வட்டங்கள் முகத்திலோ, உடலிலோ சில ஆடுகளில் இருக்கும். இந்த இன ஆடுகளில் கொம்புகள் கிடையாது. வால் நீளமாக இருக்கும். 20 விழுக்காடு ஆடுகள், ஈற்றிற்கு இரண்டு குட்டிகள் போடக்கூடியவை. தமிழ்நாட்டில் உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமேயாகும்.

செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்

1. செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல், எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.

2. ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்கு  500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.

3. செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதியை மட்டுமே மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.

4. செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.

5. அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.

6. மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.

7. வெப்பப் பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.

8. குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.

9. தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.

10. செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.

11. சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.

12. இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது. 

செம்மறி ஆடு (சினை ஆடு) பராமரிப்பு

1. குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டகையில் வைத்து கவனத்துடன் வளர்க்கவேண்டும்.

2. சினை ஆடுகளுக்கு ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி அவற்றை சிரமப் படுத்தக்கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நல்லது.

3. குட்டி ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனம் அளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

4. சரியான தீவனம் அளிக்கப்படவில்லை என்றால் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில் விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விடும்.

5. ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டகையில் வளர்க்கவேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டகை அமைத்தல் சிறந்தது.

6. குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்து குறித்து வைக்க வேண்டும். பொதுவாக 142-150 நாட்கள் வரை பால் கொடுக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

7. குட்டிகளை குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்கவேண்டும்.

குட்டி ஈனும் போது கவனிக்க வேண்டியவை

1. குட்டி ஈனும் தருணத்தில் ஆடானது மந்தையிலிருந்து பிரிந்து விடும்.

2. ஆடு அமைதியற்று, மடி பெருத்து, பெண் இனப்பெருக்க உறுப்புகள் சிவந்த வண்ணம் காணப்படும்.

3. பொதுவாக ஆரோக்கியமான ஆடுகளில் குட்டி ஈனுதல் தானாகவே நடக்கும்.

குட்டிகளைப் பிரித்துப் பாதுகாத்தல்

1. 90 நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். பால் உற்பத்தி தாய் ஆட்டிடம் குறைவாக இருக்கும்பட்சத்தில் 60 நாட்களிலிலேயே பிரித்து விடுதல் நலம்.

2. தாய்ப்பாலுக்குப் பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.

3. முள், குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேய விடுதல் கூடாது. ஏனெனில் அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: sheep farming breeds, housing,lamb care and management
Published on: 15 June 2019, 03:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now