நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தடுப்பூசி (Vaccine) மற்றும் போதிய மருந்துகள் வழங்காததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும், கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோமாரி நோய் தாக்குதல் (syphilis disease)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கால்நடைகளும் கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவது போல் ஆடு, மாடுகள் வளர்ப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதற்கு பதிலாக இது போன்ற நோய் தாக்குதலால் மேலும் குறையத் துவங்கியுள்ளது. இந்நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்காக அதன் உரிமையாளர்கள் தவியாய் தவிக்கின்றனர்.
கோமாரி நோய் தாக்குதலால் மாடு மற்றும் கன்றுகள் உணவு உட்கொள்ள முடியாமலும் காலில் புண் இருப்பதால் அடி எடுத்து வைக்க முடியாமல் சிரமப்படுகின்றன. இதனால், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட கால்நடைகளுக்கான தடுப்பூசி மத்திய அரசிடமிருந்து கால்நடை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு (Vaccine Shortage)
மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி கிடைக்காததால் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட முடியாமல் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், சிகிச்சை அளிக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டு இறக்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கால்நடை அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால், கால்நடை வளர்ப்போர் தனியார் மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் நோய்வாய்ப்பட்டிருக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தடுப்பூசி மற்றும் போதிய மருந்துகளை கால்நடைத் துறைக்கு வழங்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
பசுஞ்சாணத்தில் உரம் தயாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு!
நாட்டிலேயே முதல்முறையாக பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை: உ.பி.யில் அறிமுகம்!