உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டு மாடுகளின் வளர்ப்பை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலமாக பல நாட்டு இன் மாடுகள் அழியாமல், இன்றும் வளர்க்கப்படுகிறது. அவ்வகையில், நாட்டு மாடுகள் வளர்க்கும் விவரங்களுக்கு, உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு துவங்கியுள்ளது.
நாட்டு மாடுகள் (Country Cows)
மத்திய பிரதேச மாநிலத்தில், நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்கப்படும் என, பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார். இயற்கை விவசாயம் தொடர்பான நிடி ஆயோக் தேசிய பயிலரங்கு, மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது. இதில், காணொளி வாயிலாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
உதவித்தொகை (Subsidy)
மாநில அரசின் இயற்கை வேளாண் மேம்பாட்டு வாரியம் சார்பில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை நல்முறையில் தொடர்ந்து செய்வதற்கு, நாட்டு மாடுகள் மிக அவசியம். இதனால், விவசாயிகள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடாவது வளர்க்க வேண்டும். அப்படி, நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளோம் என மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள 52 மாவட்டங்களிலும், தலா 100 கிராமங்களில் இயற்கை விவசாயம் செய்வதன் அவசியத்தையும், புரிதலையும் அறிவுறுத்தி, விவசாயிகளை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை தொடங்க உள்ளது. நம் மாநிலத்தில், இதுவரையிலும், 1.65 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும், இயற்கை விவசாய சூழலை உருவாக்க, பயிலரங்குகளும், விவசாய பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படும். நர்மதா ஆற்றின் இரு புறமும் உள்ள கரையோர வயல்களில், இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படும் என்று மத்திப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மேலும் படிக்க