சங்க இலக்கியங்களில் வரையாட்டினை ‘வருடை’ என்று குறிப்பிடுகிறார்கள். சீவகசிந்தாமணியில் ‘ஓங்கு மால்வரை வரையாடு’ என்று குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள், உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பதாகும். சங்க காலம் தொட்டே தமிழரின் வாழ்வியலோடு பயணித்த ஒரு விலங்கினம். ‘வரை’ என்ற தமிழ்ச்சொல்லிற்கு மலை என்று பொருள். இது ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதால், மலைகளில் வாழ்கின்ற ஆடு அல்லது வரையாடு என்று பெயர் வந்தது.
தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும்கூட இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. படமாக மட்டும்தான் பார்த்திருப்போம். அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன இந்த வரையாடுகள்.
இந்தியாவில் இமாலய மலை ஆடுகள் மற்றும் வரையாடுகள் என இருவகையான மலை ஆடுகள் உள்ளன. இவ்வகையான மலை ஆடுகள் உயர்ந்த மலைகளின் மீதும் செங்குத்தான பாறை முகடுகளிலும்தான் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 1200 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உயரமான இடங்களில் மட்டும்தான் இவ்வகை ஆடுகளை காண முடியும். அதனால்தான் நம்மில் பலரால் இந்த ஆடுகளை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவதில்லை.
வரையாடுகள் பொதுவாக, அதிக மழைப் பொழிவுள்ள உயர்ந்த மலைகளின் சறுக்குப் பாறைகளிலும், உயர்ந்த சிகரங்களிலும் மட்டுமே வாழும் தகவமைப்பைக் கொண்டுள்ளன. வரையாடுகள் தமிழக கேரளப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இரவிக்குளம் தேசியப் பூங்கா (கேரளா), ஆனைமலை (தமிழ்நாடு), நீலகிரி மலைகள், வால்பாறைப் பகுதிகளில் இவற்றை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு பல லட்சங்கள் என்றிருந்த இவற்றின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் என குறைந்ததன் பிண்ணனியில் வேட்டையாடுதல், வாழ்விடங்கள் அழிப்பு, உணவு மற்றும் நீர் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்கள் உள்ளன. வனச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பின்பு எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருந்து ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவ்வகை ஆடுகள், மேய்ச்சலுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் செல்லும்.
ஒரு வயது முதிர்ந்த ஆண் வரையாட்டின் உயரம் 110 செ.மீட்டரும், பெண் வரையாடு 80 செ.மீ உயரமும் இருக்கும். ஆண் மற்றும் பெண் வரையாடுகளின் உடல் எடை முறையே 100 கிலோ 50 கிலோ என்றவாறு இருக்கும். பெண் வரையாட்டின் கொம்புகள் சற்று குட்டையாகவும், பின்னோக்கியும் அமைந்திருக்கும். இந்த வரையாட்டினை தமிழகம் மற்றும் கேரளத்தின் குறிப்பிட்ட மலைப் பகுதிகள் நீங்கலாக உலகில் வேறு எங்குமே காணமுடியாது, இங்கு மட்டுமே வாழ்வது நமது ஊரின் சிறப்பு. வரையாடுகளைப் போன்று உலகின் ஒரேயொரு பகுதியில் மட்டுமே வாழக்கூடிய வேறு எங்குமே காணமுடியாத உயிரினங்களை ஓரிட வாழ்விகள் என வகைப்படுத்தியுள்ளனர்.
பல்லாண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் பொழுது போக்கில் முதன்மையானது வேட்டையாடுதல். வேட்டையாடப்பட்ட விலங்குகளில் வரையாடுகள் முதன்மையான இடத்தில் இருந்தன. பசுமையான வனங்களை அழித்து காபி, தேயிலை எஸ்டேட்டுகளையும், யூகலிப்ட்ஸ் போன்ற மரங்களையும் நட்டு வைத்ததால், வனங்கள் இவ்வகை வரையாடுகள் வாழ்வதற்கு உகந்த நிலையை இழந்தன. மேலும், வரையாடுகளின் வாழிடம் துண்டாடப்பட்டு தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. மற்ற குழுக்களோடு இனக்கலப்பு செய்ய முடியாத காரணத்தால் மேம்பாடுடைய ஆடுகள் உருவாவதும் தடைப்பட்டது.
இவற்றின் முக்கிய உணவு பசும் புற்களே ஆகும். இவை நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்துவதில்லை மாறாக, புற்களின் மீது படிந்துள்ள பனி நீரையும், பந்த புற்களின் ஈரத்தையுமே பயன்படுத்திக்கொள்ளும். இவற்றையெல்லாம் உணராமல் புல்வெளிகளை அழித்தது வரையாடுகளின் இனம் வேகமாக அழிவதற்கு வழிகோலியது.
இவற்றின் நிறம் பாறைகளை ஒத்த நிறத்திலேயே அமைந்திருப்பதால் மனிதர்களின் கண்களுக்கோ, எதிரிகளின் கண்களுக்கோ அவ்வளவு எளிதில் தென்படுவதில்லை. பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளால் இவை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாகின்றன. பயணிகள் இதனிடம் செல்ஃபி எடுக்கின்ற பேரில் அதைத் துன்புறுத்துவதும், ஒவ்வாத உணவுகளைக் கொடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இவற்றை தொட்டாலே தோல் பிரச்னை உருவாகும் எனத் தெரியாமலேயே தொட முயல்வதுதான் வேதனையின் உச்சம். இவ்வாடுகளின் மீதுள்ள மான் உண்ணி என்கிற ஒட்டுண்ணிகள் மனிதர்கள் மீது எளிதில் தொற்றிவிடுகின்றன. இவை நம்மைக் கடிப்பதால் தோலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பல மருத்துவர்களுக்கு உண்ணிக்கடி அனுபவமற்ற தோல் பிரச்சனை என்பதால் சிகிச்சையளிப்பதும் கடினம்.
வரையாடுகள், வேகமாக அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் 1996-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள இதுப்போன்ற விலங்குகளைக் காப்பது அரசுக்கும் வனத்துறைக்குமான வேலை மட்டுமல்ல. நமக்கும் கூட மிகுந்த கடமையும் பொறுப்பும் உண்டு. நம் பகுதியின் சிறப்புமிக்க அடையாளத்தைப் கொண்டாடாவிட்டாலும் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் வாழவிடுவோம். செல்ஃபி எடுக்கிற பெயரில் தொந்தரவு கொடுப்பதையும் ஒவ்வாத உணவுகளை வலுக்கட்டாயமாக கொடுப்பதையும் தவிர்ப்போம். வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருள்களை எடுத்து செல்லாமல் இருப்போம். வனப்பாதைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களையும், பிளாஸ்டிக் பேப்பர்களையும் தூக்கியெறியாமல் வருவோம். விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்போம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001