- எந்த பால் கறவைக் காலத்திலும் அதிக பால் உற்பத்தி பெற கறவை மாடுகளுக்கு முறையாக தீவனம் அளித்து, மேலாண்மை முறைகளையும், கவனிப்பு முறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
- கறவை மாடுகளுக்குப் போதுமான அளவு பசுந்தீவனம், பயறு வகை வைக்கோல் அளிப்பதால் அதன் உடல் நலத்தைப் பேணுவதற்குத் தேவையான சக்தியை முழுவதும் இந்த தீவனங்களில் இருந்தே எடுத்துக்கொள்ளும்.
- கறவை மாடுகள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு 2-2.5 லிட்டர் பாலுக்கும் ஒரு கிலோ அடர் தீவனத்தை அதிகமாக அளிக்க வேண்டும். உப்பு மற்றும் தாது உப்புகளை கறவைக் காலத்திற்கு ஏற்றவாறு போதுமான அளவு அளிக்க வேண்டும்.
- கறவை மாடுகளை எப்போதும் பயமுறுத்தக் கூடாது. எப்போதும் அவற்றை மென்மையாகவும், அன்பாகவும் கையாள வேண்டும்.
- கன்று ஈன்ற பிறகு மாடுகளுக்கு போதுமான தீவனமும் கவனிப்பும் இருந்தால் கன்று ஈன்ற 16ம் நாளிலேயே மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த நிலையில் மாடுகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தக்கூடாது.
- மாடுகளில் கன்று ஈனுவதற்கான இடைவெளி குறைவாக இருந்தால் அவற்றின் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
- கறவை மாடுகளின் உற்பத்திக்கேற்றவாறு ஒவ்வொரு மாட்டிற்கும் தீவனமளிப்பது மிகவும் அவசியமாகும்.
- பால் கறப்பதற்கு முன்பாகவோ அல்லது பால் கறக்கும் போது அடர் தீவனமும், பால் கறந்த பிறகு உலர் தீவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு தீவனமளிப்பதால் கொட்டகையில் தூசுகள் உருவாவதைத் தடுக்கலாம்.
- அடிக்கடி மாடுகள் தண்ணீர் குடிக்கும் வகையில் போதுமான அளவு தண்ணீரை அவைகளுக்கு அளிக்க வேண்டும்.
- பால் கறப்பதற்கும் சரியான கால அட்டவணையினைப் பின்பற்ற வேண்டும். பால் மடியில் அதிகப்படியாக பால் தேங்கியிருந்தால் மேலும் பால் சுரப்பது குறைந்து விடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் கறப்பதை விட ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கறப்பதால் மாடுகளிலிருந்து 10 – 15% அதிகப்படியான பால் உற்பத்தியைப் பெற முடியும்.
- பால் கறக்கும்போது மடிக்காம்பில் அதிகப்படியாக அதிர்வுகள் இல்லாமல் வேகமாக, தொடர்ந்து, உலர்ந்த கைகளால் பாலைக் கறக்க வேண்டும். பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை மட்டும் பயன்படுத்திப் பால் கறக்காமல், முழுக்கைகளால் பாலைக் கறக்க வேண்டும்.
- திறந்த வெளி வீடமைப்பில் மாடுகளுக்கு வெயில் நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கு வசதியாகக் கொட்டகைகளை அமைக்க வேண்டும். திறந்த வெளி வீடமைப்பில் மாடுகளை வளர்ப்பதால் அவற்றிற்குப் போதுமான உடற்பயிற்சி கிடைக்கிறது.
- பால் கறப்பதற்கு முன்பாக மாடுகளின் உடலை சுத்தம் செய்வதாலும், எருமைகளைக் கழுவுவதாலும் சுத்தமான பால் உற்பத்தி செய்ய முடியும்.
- மாடுகளின் உடலை தினமும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்வதால் அவற்றின் உடல் மீது இருக்கும் தூசு மற்றும் உதிர்ந்த முடிகளை நீக்கி விடலாம். இதனால் மாடுகளின் தோல் பளபளப்பாகவும் இருக்கும்.
- வெயில் காலத்தில் எருமை மாடுகளின் மீது தண்ணீரை தெளிப்பதாலும், அவற்றை நீரில் மூழ்க அனுமதிப்பதாலும் அவைகளுக்கு வசதியான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும்.
- மாடுகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் நலக் கோளாறுகளை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
- மாடுகளிடமிருக்கும் தீய பழக்கங்களான உதைத்தல், நக்குதல், போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கன்று ஈனுவதற்கு முன்பாகக் குறைந்தது 60-90 நாட்கள் மாடுகளைப் பால் வற்றச் செய்து விட வேண்டும். இவ்வாறு பால் வற்றிய காலம் இதற்குக் குறைவாக இருந்தால் மாடுகளின் அடுத்த கறவை காலத்தில் பால் உற்பத்தி குறைந்து விடும்.
- மாடுகளைத் தாக்கும் முக்கியமான நோய்களுக்கெதிராக தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். மேலும் மாடுகளை பூச்சிகள் மற்றும் இதர உயிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
- மாடுகளுக்கு அடையாள எண்ணை இட்டு, அவை உற்பத்தி செய்யும் பால் அளவு, பாலிலுள்ள கொழுப்புச்சத்து, தீவனம் எடுக்கும் அளவு, இனப்பெருக்கம், பால் வற்றச் செய்யும் காலம், கன்று ஈன்ற தேதி போன்றவற்றைப் பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
- மாடுகளுக்கு மடி நோய்த் தாக்குதல் இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும்.