முயல்கள் பொதுவாக செல்லப் பிராணிகளாக பலராலும் வளர்க்கப்படுகிறது. முயல்கள் ஆய்வக பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காரணத்தால் அவற்றை அங்கீகாரமின்றி இனவிருத்தி செய்வது இடைக்காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் இவை உணவுக்காக அதாவது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக முயல் வளர்ப்பு சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது.
முயல் இனங்கள்
இந்தியாவை பொருத்தவரை வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், அங்கோரா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய இனங்கள் பெருமளவு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் அங்கோரா இன முயல்கள் உரோமத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை மலைப்பிரதேசம் மற்றும் குளிர்ப்பிரதேசங்களில் மட்டும் வளர்ப்பதற்கு உகந்தவை. ஏனைய இனங்களான வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றை மலைப் பிரதேசங்களிலும் சமதளப் பரப்புகளிலும் வளர்க்கலாம்.
முயல் வளர்ப்பு வாய்ப்புகள்
-
இறைச்சிக்காக, தோலுக்காக, உரோமத்திற்காக என பல்வேறு பயன்பாடுகளுக்காக வெவ்வேறு இனங்களை சேர்ந்த முயல்கள் வணிகரீதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
-
மிக குறைவான இடத்தில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்கலாம்
குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை ஈனுவதோடு விரைவில் சந்தை வயதை எட்டி விடுகிறது
-
குறைவான தீவனமே போதும் என்பதால் அதிக அளவிலான தீவனப் பயிர்கள் பயிரிட இடத் தேவை இருக்காது
-
தண்ணீர் வளம் குறைந்த பகுதிகளிலும் இவற்றை வளர்க்கலாம்
கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா சூழ்நிலைகளிலும் பெண்கள், ஆண்கள், சிறியவர், வயதானவர் என எல்லாத் தரப்பினராலும் வளர்க்கப்படுவதால் தொழில் முனைவோருக்கு முயல் வளர்ப்பு நல்ல வாய்ப்பாகவும் நல்ல தேர்வாகவும் உள்ளது.
முயல் வளர்ப்பிற்கு சாதகமான அம்சங்கள்
-
முயலின் இறைச்சி மருத்துவ குணம் வாய்ந்தது. முயல் இறைச்சியில் கொலஸ்ட்ராலின் அளவு மிக குறைவாக இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இந்த இறைச்சி உகந்தது.
-
முயல் ஒரு சாதுவான பிராணி என்பதால் ஆண், பெண், வயதானவர், சிறியவர் என்ற வேறுபாடு இன்றி அனைவராலும் பராமரிக்க முடியும்.
-
கொல்லைப்புறத்தில் ஒரு ஆண் மூன்று பெண் முயல்களை வளர்த்து வாரம் தோறும் ஒரு கிலோ இறைச்சி உற்பத்தி செய்யலாம். இது ஒரு சிறு குடும்பத்திற்கு போதுமானது.
-
கொல்லைப்புற முயல் வளர்ப்புக்கு பெரிய செலவினங்கள் ஏதும் இல்லை. சமையலறைக் கழிவுகளையும் பசுந்தீவனங்களையும் கொண்டே இவற்றை வளர்க்கலாம்.
-
முயல்களுக்கு நோய் தாக்கும் அபாயம் குறைவு என்பதால் தடுப்பூசி எதுவும் போடத் தேவையில்லை.
-
முயல் ஒரு பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை ஈனுகிறது.
-
முயலின் சினைக்காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ளதும் ஒரு சாதகமான அம்சமாகும்.
-
இவை மிக வேகமாக வளர்ந்து விரைவில் சந்தைப்படுத்தும் எடையை அடைகின்றன.
-
இவற்றின் தீவன மாற்றுத் திறனும் அதிகமாக இருக்கிறது. சமையலறைக் கழிவுகளையும் பசுந்தீவனத்தையும் இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் முயலே.
-
ஒரு நபரே 500 முயல்கள் வரை பராமரிக்க முடியும் என்பதால் வேலையாட்கள் செலவு குறைகிறது.
-
உயிர் எடைக்கும் உண்ணத் தகுந்த இறைச்சிக்கும் உள்ள விகிதம் அதிகமாக உள்ளது.
-
முயலின் இரத்தம் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
முயல் வளர்ப்பிற்கு பாதகமான சில அம்சங்கள்
-
முயல் வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது; அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும் என்ற மூடநம்பிக்கை பெரும்பாலோனோர் மத்தியில் நிலவுவதால் முயல் வளர்க்க பெரும்பாலானோரர் அஞ்சுகின்றனர்.
-
முயல் பண்ணை அமைப்பதற்கு போதுமான தொழில்நுட்ப வசதிகளும் அரசின் மானிய திட்டங்களும் கிடைப்பதில்லை என்பதால் புதிதாக தொழில் தொடங்குவோர் இந்த துறையில் ஈடுபட தயங்குகின்றனர்.
-
முயலுக்கான சந்தை வாய்ப்பு நிலையற்றதாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
-
பெரும்பாலானோர் முயலை செல்லப் பிராணிகளை போல் பார்ப்பதால் இவற்றை இறைச்சிக்காக வெட்டுவதற்கு பரிதாபப் படுகின்றனர். இந்த இறைச்சியை உண்ணுவதையும் விரும்புவதில்லை.
முயல் கிடைக்குமிடங்கள்
-
கொடைக்கானல் தாலுக்கா மன்னவன் ஊரில் இயங்கி வரும் மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மத்திய அரசு பண்ணையில் இனவிருத்திக்கான முயல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
-
இங்கு இறைச்சி இன முயல்களான சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயின்ட் மற்றும் உரோம இன முயலான அங்கோரா இன முயல்கள் விற்கப்படுகின்றன.முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் தொழில்நுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் ஊட்டியில் செயல்படும் சாண்டிநல்லா செம்மறியாட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மற்றும் காட்டுப்பாக்கத்தில் உள்ள முதுநிலை கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய பண்ணையிலும் இனவிருத்திக்கான முயல்களை வாங்கலாம்.
இனவிருத்திக்கான முயல்களை ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் தனிநபர் அல்லது தனியார் பண்ணைகளில் வாங்கலாம் என்றாலும் அதிக கவனம் தேவை. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களிலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்களிலும் முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். முயல் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.
தகவல்
சி. அலிமுதீன்,
கால்நடை பயிற்சி மருத்துவர்,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை