பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பாலில் உள்ள சத்துக்களின் அளவு மாட்டின் இனம், கறவை நிலை, தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும். பாலில் உள்ள சத்துக்கள் - தண்ணீர் - 83-87 சதவீதம், கொழுப்பு-3-5 சதம் (பசும்பால்), 6-8 சதம் (எருமைப்பால்), புரதம்-3.5 -3.8 சதம், சர்க்கரை- 4.8 - 5.0 சதம். தாதுக்கள் - 0.7 சதம்.
பெருமளவு மாறுபடும் சத்துக்கள்: கொழுப்பு மற்றும் புரதம்.
சிறிதளவு மாறுபடும் சத்துக்கள்: சர்க்கரை மற்றும் தாதுக்கள்.
பாலில் கொழுப்புச்சத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்:
- மொத்த தீவனத்தில் நார்ச்சத்தின் அளவு 30 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
- பசுந்தீவனங்கள் மட்டுமில்லாமல் உலர் தீவனங்களையும் கறவை மாடுகளுக்கு சேர்த்து கொடுக்க வேண்டும்.
- நார்த்தீவனங்களை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்காமல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்குமாறு வெட்ட வேண்டும்.
- கோ-3 அல்லது கோ-4 கம்பு நேப்பியர் புல்லை 40 முதல் 45 நாட்களுக்குள் அறுவடை செய்து தீவனமாக அளிக்க வேண்டும்.
- பருத்திக்கொட்டைப் புண்ணாக்கு, புளியங்கொட்டைத்தூள், மரவள்ளிக்கிழங்கு திப்பி ஆகியவற்றை தீவனமாக அளிக்கலாம்.
- தரம் குறைவான உலர்தீவனங்களான வைக்கோல் தட்டை ஆகியவற்றை பிரதான தீவனமாக கறவை மாடுகளுக்கு பயன்படுத்தும் போது தாது உப்புக்கலவை (30-50 கிராம்), புண்ணாக்கு வகைகள் (200-500 கிராம்) மற்றும் ஈஸ்ட் நொதி(10 கிராம்) கொடுக்க வேண்டும்.
பாலில் கொழுப்பில்லாத திடப்பொருள்கள் அதிகரிப்பதற்கான வழிமுறைகள்:
- கறவை மாடுகளுக்கு போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் அளிக்க வேண்டும்.
- உதாரணமாக 10 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு உண்ணும் அளவிற்கு உலர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் மற்றும் ஒவ்வொரு 2.5 லிட்டர் பால் உற்பத்திக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
- கன்று ஈன்ற பின் முதல் 3 மாதங்களுக்கு ஒரு கிலோ தானிய மாவு (கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம்) அளிக்க வேண்டும்.
- நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு அடர் தீவனத்தை 4 அல்லது 5 வேளையாக பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் ஒரு மாட்டிற்கு 30 கிராம் சோடியம் பைகார்பனேட் என்ற அளவில் கொடுக்க வேண்டும். 100 கிலோ கலப்புத் தீவனத்திற்கு 300-500 கிராம் சோடியம் பைகார்பனேட் சேர்க்கலாம்.
- தவிடு புண்ணாக்கு மற்றும் தானிய மாவு ஆகியவற்றை ஊறவைத்து கொடுக்கலாம். தீவனத்தில் நொதி (20-30 கிராம்) கொடுப்பதால் செரிமானத் திறன் கூடுவதோடு கொழுப்பில்லாத திடப்பொருள்களின் அளவும் அதிகரிக்கும்.
- கோடைகாலத்தில் வெப்பஅயர்ச்சி அதிகம் எனில் மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மேலும் தீவனத்தில் பேக்கரி ஈஸ்ட் (10 கிராம்) மற்றும் தாது உப்பு கலவை (50 கிராம்) அளிக்க வேண்டும்.
- அதிக பால் சுரக்கும் மாடுகளுக்கு தானிய அறுவடைக்குப்பின் கிடைக்கும் வைக்கோல் தட்டைக்குப் பதிலாக சத்தான உலர்புல் அளிக்கலாம்.