கோடைக் காலத்தில் மனிதர்களுக்கு உடல் வெப்பத்தால் உணவு உட்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல, கால்நடைகளுக்கு (Livestock) கோடைக் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரை தீவனத்துக்காகத் திண்டாடும் நிலை உருவாகும். இதனால் பால் உற்பத்தி குறைந்து கால்நடை வளர்ப்போரின் வருவாய் (Income) குறைய வாய்ப்புள்ளது.
மர இலைகள்
கோடை காலங்களில் பசுந்தீவனங்களுக்கு (Green Fodder) மாற்றாக மர இலைகளை மாடுகளுக்கு உணவாக வழங்கலாம். மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள், வறட்சியினால் எப்போதும் பாதிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றைக் கால்நடைகளுக்குத் தயங்காமல் வழங்கலாம் என திருப்பத்தூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் த.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
தீவன இலை வகைகள்
கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தக்கூடிய மர இலைகளை 6 வகையாகப் பிரிக்கலாம். அதில், வாகை இலைகள், அகத்தி இலைகள், வேம்பு இலைகள், சவுண்டல் அல்லது சூபாபுல் இலைகள், கிளைரிசிடியா இலைகள், கல்யாண முருங்கை மரங்களின் இலைகள் ஆகியவை சிறந்த பசுந்தீவனமாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக மர இலைகளில் 10 முதல் 15 சதவீதம் புரதச் சத்தும் (Proteins), 40 முதல் 65 சதவீத மொத்தம் செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. சூபாபுல், அகத்தி போன்ற மர இலைகளில் 20-ல் இருந்து 25 சதவீதம் புரச்சத்து உள்ளது. மர இலைகளின் மூலம் உயிர்ச்சத்து வைட்டமின் ‘ஏ’ கால்நடைகளுக்குக் கிடைக்கிறது.
மர இலைகளில் பொதுவாக சுண்ணாம்புச்சத்து மிக அதிகமான அளவில் இருக்கும். மணிச்சத்து மிக மிகக் குறைவான அளவில் இருப்பதால் மணிச்சத்து அதிகமாக உள்ள அரிசி, கோதுமை, தவிடுகளை மர இலைகளுடன் சேர்த்து அளிப்பதால் மணிச்சத்து குறைப்பாட்டினைத் தவிர்க்கலாம்.
ஊட்டச்சத்து மிகுந்த மர இலைகளை சில கால்நடைகள் உண்ணத் தயங்கும். மர இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்த ஒரு சில வழிமுறைகளைக் கையாள வேண்டும், அதாவது மர இலைகளைத் தீவனமாக வழங்கும்போது சிறிய அளவில் கொடுத்து முதலில் பழக்கப்படுத்த வேண்டும்.
மர இலைகளைப் பிற தீவனப் புற்களுடன் சேர்த்து வழங்கலாம். மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை, கோதுமை தட்டையுடன் சேர்த்து வழங்கலாம்.
காலையில் வெட்டிய இலைகளை மாலை வரையும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையும் வாட வைத்து அவற்றை வழங்கலாம். மர இலைகளைக் காய வைத்து அவற்றின் ஈரப்பத்தை (Moisture) சுமார் 15 சதவீதம் கீழே குறைப்பதன் மூலம் நீண்ட நாட்கள் சேமிக்கலாம். இதன் மூலம் நச்சுப் பொருட்களின் அளவும் குறையும். அதேபோல, மர இலைகள் மீது 2 சதவீதம் உப்புக் கரைசலைத் தெளித்து வழங்கினால், உப்புச் சுவையால் மரத்தின் இலைகளைக் கால்நடைகள் அதிகமாக உண்ணும்.
மேலும், மர இலைகள் மீது வெல்லம் கலந்த நீரையும் தெளித்து அதையும் வழங்கலாம். பொதுவாகக் கால்நடைகள் ஒரே வகையான மர இலைகளை எப்போதும் விரும்பாது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறான இலைகளைக் கால்நடைகளுக்கு வழங்குவது சிறந்ததாகும்.
தீவன அளவு
கறவை மாடுகளுக்குத் தினந்தோறும் 8 முதல் 10 கிலோ வரை மர இலைகளைத் தீவனமாக வழங்கலாம். வெள்ளாடுகளுக்கு 3 முதல் மூன்றரை கிலோ அகத்தி இலைகளை வழங்கலாம். செம்மறி ஆடுகளுக்கு 0.5 முதல் 2 கிலோ வரை அகத்தி இலைகளை வழங்கினால் ஆட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மர இலைகளை முழுமையாகப் பசுந்தீவனத்துக்கு மாற்றான தீவனம் எனக் கருதி அதையை தொடர்ந்து வழங்குவது நல்லதல்ல.
அதேபோல, கோடைக் காலங்களில் மர இலைகளைத் தவிர கால்நடைகளுக்கு வேறு தீவனங்களும் வழங்கலாம், அதாவது, வாழைக்கன்று, தென்னை ஓலை, மரவள்ளிக்குச்சி ஆகியவற்றையும் வழங்கலாம். அதே நேரத்தில் வாழைக்கன்று மற்றும் மரவள்ளிக் குச்சியைச் சினை மாடுகளுக்கு வழங்கக் கூடாது. தென்னை ஓலைகளைக் குறைந்த அளவே வழங்க வேண்டும்.
கோடைக் காலங்களில் இதுபோன்ற தீவனங்களைக் கால்நடைகளுக்குக் கொடுப்பதன் மூலம் கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்து வருவாயைப் பெருக்குவதுடன் வறட்சிக் காலங்களில் தீவனத் தட்டுப்பாடு ஏற்படாமல் கால்நடைகளை நம்மால் பாதுகாக்க முடியும் என்று கால்நடை மருத்துவர் த. அன்புசெல்வம் (T. ANBUSELVAM) தெரிவித்தார்.
மேலும் படிக்க
தந்தைக்கு உதவ நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கிய பள்ளி மாணவி! கிராம மக்கள் பாராட்டு!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை