ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளைப் போன்றே தற்போது வான்கோழி இறைச்சியும் அசைவ பிரியர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. விலை குறைவாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருப்பதால் தற்போது வான்கோழி வளர்ப்பிற்கு மவுசு அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் வருமானம் பெற வழிவகுக்கும்.
வான்கோழி வளர்ப்பின் சிறப்புகள்
-
நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வளர்த்து பயன்பெறலாம்.
-
வீடுகளின் புறக்கடையில் அல்லது கொல்லைப்புறத்தில் எளிதாக வளர்க்கலாம்.
-
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெற வான்கோழி வளர்ப்பு உகந்தது. மிகவும் இலாபகரமான தொழிலாக நடத்தலாம்.
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் தடுப்பூசிகளுக்கான செலவும் குறைவு.
-
பெரிய பண்ணைகளில் வான்கோழிகளை செயற்கை முறை கருவூட்டல் மூலமும் இனவிருத்தி செய்யலாம். ஆதலால் ஆண்கோழிகளை பராமரிக்கும் செலவைக் குறைக்கலாம்.
-
இறைச்சியினை சுலபமாக சுத்தம் செய்யலாம்
வான்கோழி இரகங்கள்
அகன்ற மார்புடைய பிரான்ஸ்
-
இறகுகள் வெண்கல நிறத்தில் இருக்கும்.
-
உடல் எடை : சேவல் : 7கிலோ; பெட்டை: 4 கிலோ
(4 மாத வயதில் முறையான பராமரிப்பில்).
அகன்ற மார்புடைய வெள்ளை
-
வெண்மை நிறத்தில் இருக்கும்.
-
அகன்ற மார்புடைய ப்ரான்ஸ் மற்றும் வெள்ளை ஹாலந்து கலப்பு இனங்களின் ரகமாகும்.
-
உடல்எடை : சேவல் : 6 கிலோ; பெட்டை : 4 கிலோ
(4 மாத வயதில் முறையான பராமரிப்பில்).
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை
-
அமெரிக்க விவசாய ஆராய்ச்சி நிலையம், பெல்ட்ஸ்வில்லில் உருவாக்கப்பட்டதாகும்.
வெள்ளை நிறத்தில் இருக்கும். -
முட்டை உற்பத்தித் திறன், கருவளர்த்தன்மை, குஞ்சு பொரிக்கும் திறன் ஆகிய பண்புகள் அதிகம்.
-
உடல்எடைசேவல் : 3.5 கிலோ; பெட்டை: 2.5 கிலோ
(4 மாத வயதில் முறையான பராமரிப்பில்).
நந்தனம் வான்கோழி - 1
-
கோழியின ஆரய்ச்சி நிலையம் நந்தனத்தில் கறுப்பு நாட்டு வான்கோழிகளை அயல் நாட்டு பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழிகளுடன் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட வான்கோழி வகையாகும்.
-
பிற வான்கோழிகளைக் காட்டிலும் குஞ்சு பொரிப்புத்திறன் 10% அதிகம்.
-
மிருதுவான சுவையான இறைச்சி.
-
அதிக முட்டை உற்பத்தி.
-
தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது.
-
சிறகுகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்
வான்கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை
-
புறக்கடை மற்றும் இதர நிலப் பகுதியில் மேய்க்கும் முறையாகும்.
-
இரவு நேரங்களில் மட்டும் வான்கோழிகள் கொட்டகையில் அடைக்கப்படுகின்றன
-
ஒரு ஏக்கர் நிலத்தில் 200 முதல் 250 வளர்ந்த வான்கோழிகளை வளர்க்கலாம்.
-
மேய்ச்சல் தரையை சுழற்சி முறையில் மாற்றி உபயோகப்படுத்தல் நல்லது.
கொட்டில் முறைகள்
அழ்கூள முறை
-
வான்கோழிக் குஞ்சு பொரித்த நாள் முதல் விற்பனை செய்யும் நாள் வரை கொட்டகையினுள்ளே வளர்க்கப்படுகின்றன
-
இறைச்சிக் கோழி வளர்ப்புக்கான கொட்டகை அமைப்பே வான்கோழி வளர்ப்புக்கும் சிறந்தது.
-
தென்னங்கீற்றுகள் அல்லது அஸ்பெஸ்டாஸ் அல்லது ஓடுகள் கொண்டு கூரை அமைத்துக் கொள்ளலாம்.
-
ஆழ்கூளமாக நெல் உமி, நிலக்கடலை மேலோடுகள் மற்றும் மரத்தூள் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம்.
-
ஆழ்கூளப் பொருளை 6 அங்குல உயரத்திற்கு தரையிலிருந்து சீராக பரப்பி விட வேண்டும்.
-
ஆழ்கூள தூசிகள் மற்றும் அம்மோனியாவின் தாக்கத்திலிருந்து வான்கோழிகளை பாதுகாக்க தினமும் ஆழ்கூளத்தை கிளறிவிட வேண்டும்.
-
ஆழ்கூளம் அதிக ஈரம் ஆகாமல் பராமரித்தல் அவசியம். ஈரமானால் 200 சதுரஅடிக்கு 4 கிலோ சுண்ணாம்புத்தூளை தூவி கிளறிவிடுவது அவசியம்.
கூண்டு முறை
-
ஒரு நாள் முதல் 8 வாரங்கள் வரை கூண்டு முறையில் வளர்க்கலாம்.
-
கூண்டின் அகலம் 3 அடியாகவும், உயரம் 2 அடியாகவும் இருக்க வேண்டும்.
-
கூண்டு தரையிலிருந்து மூன்று அடி உயரத்தில் பொறுத்தப்பட வேண்டும்.
வான்கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்
இராணிக்கெட் நோய் (வெள்ளைக் கழிச்சல் நோய்)
-
பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் எச்சமிடும்.
-
முட்டையின் தரம் குறையும்.
-
முட்டைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விடும்.
-
அதிக எண்ணிக்கையில் இறப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள்
தடுப்பூசி : முதல் வாரம் ; 35வது நாள், 8 வது வாரத்தில் அளிக்க வேண்டும்.
அம்மை நோய்
பாதிக்கப்பட்ட வான்கோழிக்குஞ்சுகளின் மூக்கு, வாய், கண், இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்று கட்டிகள் தோன்றும்.
தடுப்பு முறைகள்
-
தடுப்பூசி : 6வது வாரத்தில் அளிக்க வேண்டும்.
-
வெளிப்பூச்சாக போரிக் அமில களிம்பை வேப்பெண்ணெயில் கலந்து தடவலாம்.
-
மஞ்சள், வேப்பிலை அரைத்துத் தடவலாம்.
தொற்றும் பெருமூச்சுக்குழல் நோய்
-
இளம் வான்கோழிக்குஞ்சுகளையே அதிகம் தாக்கக் கூடியது.
-
மூக்கின் உட்பகுதி பாதிக்கப்படும்; சுவாசப் பாதை முழுவதும் சளி அடைத்துக் கொள்ளும்.
-
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
கழிச்சல் நோய்
-
35 முதல் 50 நாட்களுக்குட்பட்ட வான்கோழிக் குஞ்சுகளைத் தாக்கும்.
-
இரத்தப் போக்கு அதிகமாக இருப்பதால், வான்கோழிகள் அதிகம் இறப்பதற்கு வாய்ப்புண்டு.
கருப்புத்தலை நோய்
-
பாதிக்கபட்ட வான்கோழிகள் மஞ்சள் நிறத்தில் எச்சமிடும்.
-
உருண்டைப் புழுவின் முட்டைகள் மூலமாக தீவனத்துடன் கலந்து உடலினுள் சென்று நோயை உண்டாக்குகிறது.
தடுப்பு முறைகள்
குடற்புழு நீக்க மருந்து தவறாமல் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க..
சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!