பூசா ஹைட்ரோஜெல்
மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரைச் சேமித்து பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்கு, பூசா ஹைட்ரோஜெல் என்னும் வேளாண்மை வேதிப் பொருளை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வேதிப் பொருள் பாலிமர் வகையைச் சேர்ந்தது. காய்ந்த நிலையில் இருக்கும் பூசா ஹைட்ரோஜெல் பழுப்பு நிறத்தில் உலர்ந்த சவ்வரிசி போல காணப்படும். இதன்மீது தண்ணீர் பட்டவுடன் தனது இயல்பான எடையை விட 400 மடங்கு எடையுள்ள நீரை உறிஞ்சி சேமித்து வைத்து, சிறிது சிறிதாக மண்ணில் வெளியேற்றும்.
பூசா ஹைட்ரோஜெல்லைப் பயன்படுத்தி, மானாவாரி நிலங்களில் மழை நீரை சேமித்து, நீண்ட நாள்களுக்கு பயிரின் வேரில் சிறிதுசிறிதாக தண்ணீர் கிடைக்கும் வகையில் செய்யலாம். பூசா ஹைட்ரோஜெல் தண்ணீரை மட்டுமின்றி, உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் உறிஞ்சி சேமித்து வைத்து, சிறிது சிறிதாக வெளியேற்றுகிறது. இந்த வேளாண்மை வேதிப் பொருளை, இறவை பாசனப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
முக்கிய அம்சங்கள்
- பூசா ஹைட்ரோஜெல் மண்ணில் நீர் சேமிப்பை அதிகரிக்கிறது. உப்பு மற்றும் கடினத் தன்மை உடைய தண்ணீரையும் அதிக அளவில் உறிஞ்சுகிறது. 40 முதல் 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ள பகுதியிலும் பயன்படுத்தலாம்.
- மண்ணில் ஓராண்டு வரை நிலைத்திருக்கும். உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளைச் சேமித்து வைத்து, நிலத்தில் வீணாவதைத் தடுக்கிறது. மண்ணில் விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சிக்கும், வேர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதிக பூ மற்றும் காய் உற்பத்திக்கும் உதவுகிறது.
- பூசா ஹைட்ரோஜெல் தில்லியில் உள்ள வேளாண்மை வேதிப் பொருள் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 2.5 கிலோ எடையுள்ள பூசா ஹைட்ரோஜெல்லைப் பயன்படுத்தலாம்.
- தற்போது, வேளாண்மைத் துறை சார்பில் மானாவாரி நிலங்களில் பூசா ஹைட்ரோஜெல்லைப் பயன்படுத்தி, பரிசோதனைத் திடல்கள் அமைக்கபட உள்ளன.