Animal Husbandry

Thursday, 11 March 2021 09:28 AM , by: Elavarse Sivakumar

Credit : PoPo

விவசாயத்திற்கு உதவுவதன் மூலம் விவசாயிகளின் குடும்ப உறுப்பினராகவும், விவசாயம் பொய்த்துப்போகும் காலங்களில், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நண்பனாகவும் விளங்குபவை கால்நடைகள்.

பலவித நோய்கள் (Various diseases)

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடு, மாடு, என விவசாய பணிகளோடு இணைந்துள்ள கால்நடைகளுக்கு தற்போது புதிது புதிதாய் நோய்கள் தாக்குவது விவசாயிகளை அச்சப்படுத்தி வருகிறது.

மூலிகை மசால் உருண்டை (Herbal spice balls)

எனவே நோய் வருமுன் பாதுகாக்க வேண்டுமானால், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது. இதற்கு வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய மூலிகை மசால் உருண்டை பெரிதும் கைகொடுக்கும்.

நோய்கள் தாக்காது (Diseases do not strike)

ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு மூன்று மாதங்களுக்கொரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது.
சாப்பிடுகின்ற தீனி எளிதில் ஜீரணமாகும். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மூலிகைகள் (Herbs)

அருகம்புல், ஆவாரம் பூ இலை, வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கண்ணி, சோற்றுக்கற்றாழை, ஆடாதோடா, வாத நாராயணன் இலை, ஓரிதழ் தாமரை, செம்பருத்தி, தும்பை, அழுதாழை,பெரியா நங்கை, சிறியா நங்கை, அமுக்காரா,பச்சரிசி, வாழைப்பூ,வெற்றிலை, பிரண்டை, துத்தி,மாவிலை,வல்லாரை, துளசி, முடக்கறுத்தான்,மணத்தக்காளி, புதினா, நெருஞ்சி, நெல்லிக்காய், நுணா, பொன்னாங்கண்ணி, நல்வேளை, நாய்வேளை, பால்பெருக்கி, குப்பைமேனி, கோவை இலை,மொசு மொசுக்கை, கருவேப்பிலை, கீழாநெல்லி, அகத்தி, சரக்கொன்றை, நிலவேம்பு, வேலிப்பருத்தி, வெட்டிவேர்,போன்ற மூலிகைகள் மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும்.

வீட்டுப்பொருட்கள் (Household items)

இதேபோல், சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, அகில்,மிளகாய் வற்றல், கிராம்பு, ஜாதிக்காய், கடுக்காய், வெந்தயம், அதிமதுரம், சீரகம், கசகசா, ஓமம், உப்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு, சிறிய வெங்காயம், கொத்தமல்லி விதை, பெருங்காயம், தேங்காய்,பனைவெல்லம், ஏலக்காய், மஞ்சள்தூள் ஆகிய சமையலறைப் பொருள்களும் தேவைப்படும்.

தயாரிப்பு (Product)

மூலிகைச் செடிகளை தனியாகவும், சமையலறைப் பொருள்களை தனியாகவும் மிக்ஸி, கிரைண்டரில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து ஆரஞ்சுப் பழ அளவிற்கு உருட்டிக் கொண்டு மஞ்சள் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூலிகை மசால் உருண்டைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இந்த மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இருக்கும் மூலிகைகளைக் கொண்டே அந்த மூலிகை மசால் உருண்டைகளாய் தயார் செய்து கொள்ளலாம். மூலிகைகள் கிடைக்கும் பொழுது அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)