Animal Husbandry

Friday, 27 December 2019 02:58 PM , by: KJ Staff

நாமெல்லாம் நினைப்பது போல் கோவேறு கழுதைகள் கழுதை இனத்தை சேர்ந்தவை அல்ல. கழுதையையும் குதிரையையும் கலப்பு செய்வதால் பெறப்பட்ட ஒரு வகை உயிரினம் ஆகும். ஆண் கழுதைகளை பெண் குதிரையோடு கலப்புச் செய்வதால் இந்த கோவேறு கழுதைகள் பெறப்படுகின்றன. ஆண் குதிரையை பெண் கழுதையோடு கலப்பு செய்து ஹின்னி எனப்படும் ஒரு வகை உயிரினம் பெறப்படுகிறது.

கோவேறு கழுதைகளும் ஹின்னியும் கழுதையை விட உயரம் கூடுதலாகவும் குதிரையை விட உயரம் குறைவாகவும் இருக்கும். இவை கழுதைகளை விட அதிக தாங்கும் திறன் மற்றும் அதிகப்படியான எடையைத் தாக்குப் பிடிக்கும் திறனையும் மலையேறும் திறனையும் கொண்டுள்ளன. இந்த வகை உயிரினங்களால் இனவிருத்தி செய்ய முடியாது. செயற்கை முறை இனவிருத்தி மூலமாகவே அதாவது கழுதையும் குதிரையும் செயற்கையாக கலப்புச் செய்வதன் மூலமாகவே கோவேறு கழுதைகளை பெற முடியும். ஆண் மற்றும் பெண் கோவேறு கழுதைகளை இனச்சேர்க்கை செய்து புதிய கோவேறு கழுதையை உருவாக்க முடியாது.

மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் மலை மேலே எடுத்துச் செல்வதற்காக பலர் கோவேறு கழுதைகளை வளர்க்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்வாதாரம் ஆகவும் உள்ளது. இந்திய ராணுவத்திலும் கோவேறு கழுதைகள் வளர்க்கப்படுகின்றன. இவை மலைப் பிரதேசங்களின் மேல் பகுதிகளுக்கு ஆயுதங்களையும் இதர உடைமைகளையும் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர கோவேறு கழுதைகள் வேறு எதற்கும் பயன்படாத காரணத்தினால் மலைப் பிரதேசம் அல்லாத இதர பகுதிகளில் இவற்றைக் காண்பது அரிதாகவே உள்ளது.

கோவேறு கழுதைகள் ஏன் இனப்பெருக்கம் செய்வதில்லை??

பொதுவாக கலப்புயிரினங்களை உருவாக்கும்போது ஒரே உயிரினத்தில் உள்ள இரு வேறு இனங்களை கலப்பு செய்வார்கள். எடுத்துக்காட்டாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியாவில் கலப்பினப் பெருக்கம் செய்யப்பட்டது. மாடுகளை மாடுகளோடு தான் கலப்பு செய்தார்கள். நம் நாட்டின மாடுகளை அதிக பால் தரும் ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் போன்ற மாடுகளோடு கலப்பு செய்தார்கள். அதாவது ஒத்த குரோமோசோம் எண்ணிக்கை உள்ள இனங்களை கலப்பு செய்ய வேண்டும். எனவே, இதன் மூலம் பெறப்பட்ட கலப்புயிரியில் குரோமோசோம் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. அதனால் இவை இனப்பெருக்கம் செய்யதக்கவையாக இருந்தன.

கோவேறு கழுதைகளை உருவாக்குவதற்காக 31ஜோடி (62) குரோமோசோம்களைக் கொண்ட கழுதையும் 32 ஜோடி (64) குரோமோசோம்களைக் கொண்ட குதிரையும் கலப்பு செய்யப்பட்டது. இருவேறு உயிரினங்களை கலப்பு செய்து பெறப்பட்ட கோவேரி கழுதையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படுத்தும் விதமாக 63 என்று இருந்தது. குதிரையில் இருந்து 32 குரோமோசோமும் கழுதையில் இருந்து 31 குரோமோசோமும் சேர்ந்து கோவேறு கழுதையின் மரபு உருவானது. பொதுவாகவே குரோமோசோம்கள் ஜோடியாகவே அமையும்.  இவ்வாறு ஓர் குரோமோசோம் ஜோடி இன்றி தனித்து இருந்ததால் கோவேறு கழுதைகளால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)