சிறு, குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க சிறந்த வழிமுறைகளில் ஒன்று கொல்லைப்புற கோழி வளர்ப்பு. மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம் (CARI) உருவாக்கிய CARI-NIRBHEEK கோழி இனம் கால்நடைகள் விவசாயிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதுடன் விவசாய விளைப்பொருளுடன் கூடுதல் லாபத்தையும் தருகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் முட்டை மற்றும் கோழியின் தேவையை பூர்த்தி செய்ய கோழி வளர்ப்பையும் ஊக்குவிக்கும் முயற்சியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் CARI-NIRBHEEK கோழி இனத்தினை வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது அரசு. இந்த கோழி ஏன் கொல்லைப்புற வளர்ப்புக்கு ஏற்றது, இதன் தன்மை என்ன?, இதனால் கிடைக்கும் பயன் போன்றவற்றின் தகவல்களை இப்பகுதியில் காணலாம்.
CARI-NIRBHEEK இனத்தின் தன்மை விவரம்:
CARI-NIRBHEEK என்பது இரட்டை வகை வண்ணமயமான உள்நாட்டு கோழி ஆகும். இது முட்டை மற்றும் இறைச்சிக்காக பிரத்யேகமாக வளர்க்கப்படுகிறது. இந்த இனத்தின் சிறப்பு என்னவென்றால், கொல்லைப்புற கோழி வளர்ப்பில் கால்நடை விவசாயிகள் எதிர்கொள்ளும் வேட்டை பிரச்சனைகள், மோசமான காலநிலை, போதிய ஊட்டச்சத்துமின்மை மற்றும் உற்பத்தித்திறன் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கிறது.
இந்த பறவையின் இறகுகள் வண்ணமயமானவை. லேசான உடல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல வளர்ச்சி விகிதத்தையும் இந்த கோழி கொண்டுள்ளன. மற்ற இனத்துடன் ஒப்பிடுகையில் முட்டையிடும் திறனும் அதிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
CARI-NIRBHEEK-யின் முக்கிய அம்சங்கள்:
இந்த பறவை இனம் அதன் கடுமையான மற்றும் சண்டையிடும் தன்மைக்கு பெயர் பெற்றது. இவற்றின் நடை முறை மற்ற கோழிகளிலிருந்து வேறுபட்டது. இது சுத்தமான தேசி கோழி.
அவற்றின் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள், கழுத்து நீளமானது மற்றும் கால்கள் வலுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் உள்ள சிறிய இடத்திலும் வளர்க்கலாம். பொருளாதார நிலை சரியில்லாத விவசாயிகளும் குறைந்த செலவில் கோழி வளர்ப்பைத் தொடங்கலாம்.
இந்த இனத்தின் கோழி இறைச்சியில் புரதம் நிறைந்துள்ளது. இந்த இனத்தின் ஆண் பறவையின் எடை 20 வாரங்களுக்குள் 1850 கிராம் ஆகிவிடும். பெண்ணின் எடை சுமார் 1350 கிராம் ஆகும். இந்தக் கோழிகள் 170-180 நாட்களில் 170 முதல் 200 முட்டைகளைக் கொடுக்கும்.
கோழி வளர்ப்பு தொடர்பான சில முக்கிய விஷயங்கள்:
உங்கள் வீட்டு முற்றத்தில் CARI-NIRBHEEK ஐ வளர்க்க நினைத்தால், கிடைக்கும் இடத்தைப் பொறுத்து 5 முதல் 25 பறவைகளுடன் தொடங்கலாம். பறவைகள் பகல் முழுவதும் சுற்றித்திரியலாம். ஆனால் இரவில் அவற்றின் பாதுகாப்பிற்கு சுத்தமான மற்றும் நன்கு காற்றோட்டமான அடைப்பு கூடு அவசியம்.
பறவைகளை அழைத்து வந்த முதல் இரண்டு-மூன்று நாட்களுக்கு தானிய கலவையை உள்ளடக்கிய போதுமான உணவு கொடுக்கப்பட வேண்டும். வெளிப்புறத்தில் மேய்ச்சல் தன்மை நன்றாக இருப்பின் பின்னர் உணவின் அளவை குறைக்கலாம்.
தமிழ்நாடு உட்பட நாட்டின் சுமார் 16 மாநிலங்களில் விவசாயிகள் இதை வளர்த்து வருகின்றனர். கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மா விவசாயிகள் பழத்தோட்டத்தில் உள்ள பல்வேறு பூச்சிகளை அகற்ற மாம்பழ சாகுபடியுடன் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கோழியால் பூச்சிக்கொல்லி மருந்து செலவு மிச்சமாவதோடு கோழி இறைச்சி, முட்டை என இரட்டிப்பு லாபம் பார்த்து வருகின்றனர்.
இதையும் காண்க:
பிளாஸ்டிக் அரிசியை அடையாளம் காண 3 எளிய வழிமுறை இதோ!
உடலுறவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன?