நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வகையில் விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறோம். இது இப்பொழுது ஆரம்பித்த பழக்கமல்ல. பழங்காலத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த காலம்தொட்டே விலங்குகளை உணவுக்காகவும், வேட்டையாடவும் வளர்த்து வந்தான். அவற்றுள் செம்மறி ஆடும், நாயும் முதலில் வளர்க்கப்பட்டது. அப்பொழுது மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்பட்ட இணைப்பு, இன்று மனிதர்களை அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர் என்று கூறுவதைவிட அவர்களின் பெற்றோர் (Pet Parents) எனக் கூறும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டது.
" இயற்கை என்றாலும் உறவு என்றாலும் அழகு என்றால், ஆபத்து இருக்கத்தானே செய்யும்!!!"
அப்படி ஒன்றுதான் "விலங்கிய நோய்கள்" அல்லது "விலங்கு வழி பரவும் நோய்கள்" (Zoonotic diseases). இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குக்கும் பரவக்கூடியது. இந்த நோய்களுக்கான காரணிகள் நுண்ணுயிரி போன்ற பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் உண்ணி போன்றவை ஆகும். அதிக பாதிப்பில் உள்ள மக்கள்: கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள், இறைச்சி வெட்டுவோர், கால்நடை வளர்ப்போர். சமீபத்தில் மனிதர்களுக்கு தோன்றும் நோய் தொற்றுகளில் 60% விலங்கு வழி பரவும் நோய்கள் என கூறப்படுகிறது. விலங்கிய நோயால் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றது. மனிதன் பொருளாதார சரிவையும் சந்திக்கிறான். விலங்கிய நோய் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு நிபா வைரஸ் ஒரு எடுத்துக்காட்டே. இன்று நாம் அனைவரும் வீட்டில் இருப்பதற்குக்கூட இதுதான் காரணம். விலங்கிய நோயில் பலவகை உண்டு. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் - வெறிநாய்க்கடி நோய் (Rabies). மனிதர்களிடமிருந்து விலங்குக்கு பரவக்கூடிய நோய்கள் - காசநோய்(Tuberculosis). மண் மற்றும் பறவைகளிடமிருந்து பரவக்கூடிய நோய்கள் - பூஞ்சை தொற்று( Histoplasmosis).
இப்படி, நோய் பல இருக்கலாம்; பரவும் வழிகளும் பல இருக்கலாம்; ஆனால் கால்நடை மருத்துவர்கள் தங்கள் பிரம்மாஸ்திரம் கொண்டு நோய் பரவுவதை தடுக்க தானே செய்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் அறிந்த ஒரு நோய்தான் Rabies என்று சொல்லக்கூடிய வெறிநாய்க்கடி நோய். இதைப்பற்றி ஒரு குறிப்பும் அதை கால்நடை மருத்துவர்கள் எப்படி மனிதர்களுக்கு பரவாமல் இருக்க தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று பார்ப்போம். ரேபிஸ் ஒருவகையான வைரஸ் மூலம் பரவக்கூடிய நோய். இது, பாதிக்கப்பட்ட நாய் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் கடித்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட நாயின் உமிழ் நீர் காயங்களில் பட்டாலோ நோய் தொற்று ஏற்படும். அந்த வைரஸ், காயம் ஏற்பட்ட இடத்தில் பெருகி நரம்பு மண்டலத்தை அடைகிறது. பின் மூளையை அடைந்து நரம்பு மண்டலம் மூலமாகவே பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர் வழியாக வெளியேறுகிறது. நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே உமிழ்நீரில் வைரஸ் வெளியேறுகிறது. நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி (Incubation period according to WHO) ஒரு வாரத்தில் இருந்து ஒரு வருடம் வரை. நோய் அறிகுறிகள் சீற்றம்(furious) மற்றும் முடக்கம் (dumb) என இரண்டு வகையாக வெளிப்படுத்தப்படுகிறது. நோய்க்கான அறிகுறிகள் காய்ச்சல், தசைப்பிடிப்பு, அதிகமாக உமிழ் நீர் வழிதல், நீர் பயம், ஒளி பயம், பக்கவாதம், கோமா மற்றும் மரணம் ஏற்படும். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை ஆனால் 100% தடுக்க இயலும். நாய் கடி ஏற்பட்ட உடனே காயம் ஏற்பட்ட இடத்தில் சோப்பு போட்டு கழுவி, மருத்துவரை அணுகி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் இந்நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். விலங்கிடமிருந்து மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட வைரஸ் கிருமியை விலங்கிடமே தடுக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
நோய் தடுப்பு முறையாக முதலில் அரசு மருத்துவமனையில் அல்லது தனியார் சிகிச்சையக்கத்தில் வரும் நாய்களுக்கு தடுப்பூசி போடுதல். நோயிற்கான அறிகுறிகள் தெரிந்த நாய் சிகிச்சைக்காக வந்தால் அதை தனிமைப்படுத்தி மாதிரி சேகரித்து (Sample collection) ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்புகின்றனர். நோய்த்தொற்று இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். பின்பு நோய்த்தொற்று ஏற்பட்ட அந்த ஊருக்கோ அல்லது நகரத்திற்கோ கால்நடை மருத்துவர்கள் சென்று அங்குள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். அதன்மூலம் அந்த ஊரில், மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் பாதுகாக்கின்றனர், நம் கால்நடை மருத்துவர்கள். மேலும், தெருவில் பாதுகாப்பின்றி இருக்கும் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு(Animal Birth Control) செய்தும் ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்கின்றனர். நோய்த்தொற்று பற்றி கால்நடை வளர்ப்போருக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்பதில் சிறந்த பங்கு வகிக்கின்றனர்.
இவ்வாறு, விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கின்றனர், கால்நடை மருத்துவர்கள். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டே. மற்ற விளங்கிய நோய்கள் பரவாமல் இருக்க அந்த நோய் கிருமிகளின் வீரியத்தை அறிந்து அந்த நோய்த்தொற்றுக்கு ஏற்ப புதிய உத்திகளையும் கையாளுகின்றனர்.
மண்ணை நாடிய தாவரம்; தாவரத்தை நாடிய கால்நடை; கால்நடையை நாடிய மனிதன்; இந்த சூழற்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் மனிதன் மட்டும் பயனையும் அடைந்து பாதிப்பையும் ஏற்படுத்துகிறான். ஒரு தருணத்தில் இரண்டு இயற்கை அன்னையும் தன் மகனை தண்டிக்க தான் செய்கிறாள் இயற்கை பேரிடர் மூலமாகவும் நோய்த்தொற்று மூலமாகவும். ஆம்!!!!தண்டிக்கவும் செய்கின்றாள் மருத்துவர்கள் மூலம் மருந்தாற்றவும் செய்கிறாள். விலங்கு வழி பரவும் நோய்க்கு அதிக பாதிப்பில் உள்ளவர்களும் கால்நடை மருத்துவர்கள் தான் அதை பரவாமல் தடுப்பதும் கால்நடை மருத்துவர்கள் தான். அவர்களின் பணி சிறப்பாக அமைய ஒத்துழைப்பு அளிப்போம்.
சு.மகேஷ்வரி
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி