சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வசதியில்லாததால், விவசாயி ஒருவர் துப்பாக்கி மூலம் பாய்ச்சி நிலக்கடலை, உளுந்து உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறார்.
ரெயில் கன் (Rain Gun)
வேளாண்துறை சார்பில் வழங்கப்பட்ட 'ரெயின் கன்' (Rain Gun)மூலமாக வயக்காட்டுக்கு தண்ணியடிச்சு நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்கிறேன்' என்கிறார் மதுரை கொட்டாம்பட்டி மணப்பசேரியில் உள்ள வெளினிப்பட்டி கிராம விவசாயி முருகேசன்.
மனசு - மார்க்கம்
இதன்மூலம் கண்மாய் தண்ணீரோ, முறைப்பாசனமோ இல்லாமல் குறைந்த லாபத்தில் விவசாயம் செய்வது இவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. மனசு இருந்தால் மார்க்கம் இருக்கு என்பார்களே, அதைத்தான் நிரூபித்திருக்கிறார் முருகேசன்.
அவர் கூறுகையில், ஆறு ஏக்கர் இருந்தாலும் மானாவாரி விவசாயம் தான். வானம் பார்த்த பூமியில மழை பெய்தால் தான் பயிர் பிழைக்கும். சில சமயம் அறுவடை பண்ணப் போறதுக்கு முன்னால பயிர் காஞ்சி கருகி போயிடும். இழுத்துக்கோ பறிச்சுக்கோனு விவசாயம் செஞ்சேன்.
மூணு வருஷத்துக்கு முன்னால கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக 'ரெயின் கன்' (Rain Gun)பத்திக் கேள்விப்பட்டேன்.
100% மானியம் (100% subsidy)
பைப்லைன், ரெயின் கன் எல்லாம் சேர்த்து 100 சதவீத மானியம் தர்றதா சொன்னாங்க. அதனால போர்வெல் போட்டேன். ஆனால் மின்சாரம் கிடைக்கல. அப்புறம் சோலார் பத்தி கேள்விப்பட்டு அங்க போனேன். 90 சதவீத மானியம் கொடுத்தாங்க. நான் கொஞ்ச ரூபா போட்டேன்.
இப்போ 3 ஏக்கர்ல 'ரெயின் கன்' மூலம் விவசாயம் பண்றேன். ஒரு 'ரெயின் கன்' மூலமா அந்தபக்கம் 7 மீட்டர், இந்தபக்கம் 7 மீட்டர் னு தண்ணி பீய்ச்சி அடிக்கும். அதை உழவு பண்ணி விதை போடுவேன். முளைப்பு வரும் போது ஒருமுறை தண்ணி அடிப்பேன். மாசத்துக்கு நான்கு ஐந்த முறை தண்ணீர் காட்டுனால் பயிர் பொழைச்சுக்கும். வெயில் கூடுச்சுனா தண்ணி அதிகமா தேவைப்படும்.
வெயில் குறைவா இருந்தா சோலார்ல உற்பத்தி குறைஞ்சுரும். அதனால் மழைக்காலத்துல மழைய நம்பி விவசாயம் பண்றேன். உளுந்து பயிறு 80 - 90 நாளு, அது முடிஞ்சா அடுத்து நிலக்கடலை 100 நாள் பயிருனு மாத்தி மாத்தி போடுறேன். ஏக்கருக்கு வெறும் 6 மூடை எடுத்த நிலைமை மாறி இப்போ 15 இல்லைனா 16 மூடை கிடைக்குறதே பெரிய விஷயம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!