விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி செய்ய ரூ. 80,000 மானியம் அறிவிப்பு, கடும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார் மு.க. ஸ்டாலின், பட்டு உற்பத்திக்கு மானிய விலையில் கருவிகள் அறிவிப்பு, மழையால் பாதிப்படைந்த மின் கம்பங்களை நேரில் ஆய்வு செய்தார் மின்சாரத் துறை அமைச்சர், தமிழக அரசு பள்ளி மாணவர்களை துபாய் அழைத்துச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி செய்ய ரூ. 80,000 மானியம் அறிவிப்பு!
பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளுக்குக் கொடி காய்கறிகளான பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றைப் பந்தல் அமைத்து சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க சிட்டா, அடங்கல், FMP வரைப்படம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள். கூடுதல் விவரங்களுக்கு 7708328657 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பட்டு உற்பத்திக்கு மானிய விலையில் கருவிகள் அறிவிப்பு!
விவசாயிகளுக்கு மானியத்துடன் தளவாட கருவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள் மற்றும் தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52,000 மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படுகிறது. கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவையும் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
கடும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார் மு.க. ஸ்டாலின்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் மழைநீரால் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையால் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்து செய்தார். சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. தற்பொழுது இதுவரையில் சீர்காழியில் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களைச் சேர்ந்த 16,577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழையால் பாதிப்படைந்த மின் கம்பங்களை நேரில் ஆய்வு செய்தார் மின்சாரத் துறை அமைச்சர்!
கனமழையால் தமிழகத்தில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து இருந்தன. அவற்றை மாற்றி அமைக்க தமிழக அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வேலை சரிவர நடைபெற்று வருகிறதா என நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. சீர்காழியில், பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிலுவையில் இருந்த 81 மின்மாற்றிகளில், 44 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டு, 2640 குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இடையறாது இரவு பகல் பாராது உழைக்கும் மின் ஊழியர்களுக்கு அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களைத் துபாய் அழைத்துச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
துபாய் இந்திய தூதரகத்தின் அழைப்பை ஏற்று தமிழக அரசுப் பள்ளி மாணவர்களைத் தூதரகம் அழைத்துச் சென்றுள்ளார் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதன்படி மாணவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்து வருகின்றனர். அதன்படி, அபுதாபியில் அமைந்துள்ள லூவர் அபுதாபி அருங்காட்சியகம், அபுதாபி அரசக் குடும்பத்தின் அரண்மனை, அமீரகம் வளர்ச்சியடைந்த வரலாற்றை விளக்கும் காணொளி உட்பட பல்வேறு இடங்களுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, விண்வெளி தொழில் நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்து காட்சிப்படுத்தி பிரம்மிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த Museum of the Future என்ற எதிர்கால அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு மாணவர்களுடன் அமைச்சர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இப்புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க
PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
இன்றைய வேளாண் தகவல் முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!