சர்க்கரை நோயாளிகளுக்கு 'பிசாங் லிலின்', தோலில் மணம் வீசும் காவிரி சுகந்தம் வாழை ரகம், வறட்சி தாங்கும் காவிரி சபா ரகம், புயலில் சாயாத காவிரி கல்கி ரக வாழைப்பழங்களை (Banana) திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
சர்தார் படேல் விருது
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் தேசிய அளவில் 104 வாழை ஆராய்ச்சி மையங்கள் (Banana Research Centers) கலந்து கொண்டன. அதில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்தார் படேல் விருது வழங்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜீன் வங்கியைக் கொண்ட எங்கள் ஆராய்ச்சி மையத்தில் 25ஆண்டுகளாக 460 வாழை ரகங்களையும், அழியும் நிலையில் உள்ள வாழை ரகங்களையும் உற்பத்தி செய்கிறோம். தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் வகையில் 6 வகை வாழையினை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கப்பல் மூலம் ஏற்றுமதி
ஏற்றுமதி வாழையினை கண்டறிந்து, 60 நாட்கள் வரையிலும் அதன் நிறம், சுவை மாறாமல் இருக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். நவீன தொழில்நுட்பத்தால் விமானம் மூலம் அனுப்புவதை விட கப்பல் (Ship) மூலம் அனுப்பும்போது செலவு குறைகிறது. பாரம்பரிய நேந்திரம் வாழையை உணவாக மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றை பழமாக சாப்பிடும் வகையில் ஆராய்ச்சியில் உள்ளோம். இரண்டாண்டுகளில் அந்த ரகத்தை வெளியிடுவோம்.
பிசாங் லிலின்
ஆராய்ச்சி மையத்தில் 120 வெளிநாட்டு ரகங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதில் 'பிசாங் லிலின்' என்ற ரகமானது சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் உள்ளது. இது 8 மாதத்தில் தார் போடும் தன்மையுடையது.
காவிரி சுகந்தம்
இந்திய ரகத்தில்
கொல்லிமலையில் காணப்படும் கருவாழை அல்லது மனோரஞ்சிதம், நுமரன் வகைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வாழைகளிலேயே அதிக மணமானது கருவாழை தான். இது இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடையது. அதற்கு ஈடாக காவிரி சுகந்தம் என்ற ரகத்தை வெளியிட்டுள்ளோம். மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் காணப்படும் வாடல்நோய்க்கான எதிர்ப்பு சக்தி இந்த ரகத்தில் உள்ளது. கருவாழையை விட ஐந்து மடங்கு விளைச்சல் தரக்கூடியது. 7 முதல் 18 மாதங்கள் பலன் தரும். பழத்தை சாப்பிட்டு தோலை அறையில் வைத்தால் மணம் வீசும். விவசாயிகள் கேட்டால் இந்த ரக கன்றுகளை உற்பத்தி செய்து தருவோம்.
காவிரி சபா ரகம்
காவிரி சபா ரகம் வறட்சியை தாங்கி வளரும். உப்புத்தன்மையுள்ள நிலத்திலும் வளரும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் இந்த ரகம் நல்ல பலன் தரும். காவிரி கல்கி ரகம் புயலிலும் சாயாத வகையில் வளரும். காவிரி ஹரிட்டா என்ற ரகம் வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்றது. வாழைக்காயாக சமைப்பதற்கு ஒவ்வொரு சீப்பாக வெட்டினால் போதும். நீண்ட நாட்கள் பலன் தரும். இதுபோன்ற ரகங்கள் விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் உற்பத்தி செய்ய தயார்.
- உமா, இயக்குநர்
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
திருச்சி, 0431 - 261 8125.
மேலும் படிக்க
ஆடிப்பட்டம் தேடி விதைத்தால், அதிக மகசூல் நிச்சயம்!
நீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு!