உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், மகசூல் குறைவு, செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களினால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர். கோழி மற்றும் மாட்டுத்தீவன உற்பத்தியில், அதிகளவு பயன்படுத்துவதால், மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்தது. நல்ல விலையும் கிடைத்து வந்ததால், அதிகளவு விவசாயிகள் ஆர்வமாக பயிரிட்டனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மிகப்பெரிய பிரச்னையாக உருவானதோடு, மகசூல் குறைவு, நிலையான விலையில்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்தது.
மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation)
மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. வழக்கமாக, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.நடப்பு சீசனில், பி.ஏ.பி., அமராவதி பாசனம் மற்றும் மானாவாரி பாசனத்தில், ஏறத்தாழ, 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது.
அறுவடை தீவிரம்உடுமலை பகுதியில், சாகுபடியாகும் மக்காச்சோளம் அறுவடை பணி, டிச., இறுதியில் துவங்கி, மார்ச் மாதம் வரை நீடிக்கும். தற்போது, உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, தினமும், 25 டன் வரத்து உட்பட, வியாபாரிகள், நிறுவனங்கள் கொள்முதல் என, 500 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வருகிறது.
அறுவடை துவங்கி, வரத்து அதிகரித்த நிலையிலும், ஒரு குவிண்டால், 1,800 ரூபாய் வரை விற்று வருகிறது. ஆனால், படைப்புழு தாக்குதலுக்கு மருந்து, விதை, உரம், அறுவடை என சாகுபடி செலவினம் அதிகரித்து, மகசூலும் குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, 20 ஆயிரம் ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மானிய உதவி வேண்டும். அதோடு, படைப்புழு தாக்குதலுக்கு, மருந்து அடிக்க, 15 ஆயிரம் ரூபாய் என, ஏக்கருக்கு, 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வழக்கமாக, ஏக்கருக்கு, 40 குவிண்டால் மகசூல் இருக்கும்; நடப்பு சீசனில், 20 முதல், 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதனால், செலவு கூட மிச்சமாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மக்காச்சோளத்திற்கு, குவிண்டாலுக்கு, 2,500 ஆதார விலை நிர்ணயித்து, கொள்முதல் செய்து, கோழி, மாட்டுத்தீவன நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும். உரிய சாகுபடி தொழில் நுட்ப உதவி, மானிய உதவி வழங்க வேண்டும்.
அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, கோழி மற்றும் மாட்டுத்தீவன உற்பத்தி நிலையங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடியில் ஏற்பட்ட நோய்த்தாக்குதல், மகசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களினால், கடும் பாதிப்பு ஏற்பட்டு, சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. நடப்பு சீசனில், குவிண்டால், 1,800 ரூபாய்க்கு விற்றாலும், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதற்கு, சாகுபடி செலவினம் அதிகரிப்பு, மகசூல் குறைவு காரணமாக உள்ளது. சாகுபடி பரப்பு குறைந்ததால், பிப்., மாத இறுதிக்குள், அறுவடை பணி நிறைவடையும் வாய்ப்புள்ளது. தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் விலை உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கறிக்கோழி தொழில் பாதித்தால், மக்காச்சோளம் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க