ஆகாய தாமரையில் இருந்து இயற்கையாக கொசு ஒழிப்பு மருந்து தயாரிக்கும் முறையை, மாநில வன ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது திட்டமாக செயல்பாட்டுக்கு வந்தால், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் படர்வதை தடுக்க முடியும் என, அவர்கள் கூறியுள்ளனர்.
நீர்நிலைகளில் நிறைந்திருப்பது ஆகாயத் தாமரைகள் அல்ல; வெங்காய தாமரைகள். பேச்சு மொழியில் நாம் ஆகாயத்தாமரைகள் எனக்கூறினாலும், அதன் அறிவியல் பெயர் வெங்காய தாமரை தான். மிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இத்தாவரம், ஊதா நிறத்திலான பூக்களை உடையது. இவற்றை பயன்படுத்தி இயற்கை எரிவாயு மட்டுமின்றி, இதன் தண்டுப்பகுதியை வைத்து கூடைகள் தயாரிக்கலாம். இவ்வாறு நன்மைகள் இருந்தாலும், இவை நீர்நிலைகளின் சமநிலையை பாதிக்கின்றன.
நீர்நிலைகளின் சமநிலை பாதிப்பு
நீர்நிலைகளின் சமநிலை, நுண்ணுயிர்களை நம்பி வாழும் மீன்களையும், மீன்களை நம்பி வாழும் பறவைகளையும் கொண்டது. இந்த வெங்காய தாமரை நீர்நிலைகளில் தேங்கி நிற்பதால், சூரிய ஒளி உட்புகுவதை தடுத்து, ஆக்சிஜன் ஓட்டத்தை நிறுத்துகிறது.
இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, மீன்கள் மற்றும் நுண்ணுயிர்கள் இறக்கின்றன.
நுண்ணுயிர்கள், உயிரினங்கள் இறந்து அழுகுவதால், அதிலிருந்து காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு, உயிரினங்கள் இறந்து நோய்வாய்பட்டு தேங்கும் நீரானது, வெளியேற்றப்பட்டு ஆற்றில் செல்லும் போது, அவற்றை பருகும் விலங்குகள் மற்றும் கால்நடைகள் நோய் வாய்ப்படுகின்றன. இந்நீரை, விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தினால், எதிர்பார்த்தளவு மகசூலும் கிடைப்பதில்லை.
ஈர நிலங்களில் தேங்கி நிற்கும்போது, அவற்றில் உள்ள நுண்ணுயிர்களையும் கொன்று, அங்கு வளரக்கூடிய, மருத்துவ குணம் கொண்ட சில தாவரங்களையும் அழிக்கிறது. இத்தாவரம், நீர்நிலைகளில் உள்ள நீரின் வெப்பநிலை, கார அமிலத் தன்மை, ஆக்சிஜன் அளவை மாற்றி, நீராவியாதலை தடுக்கிறது. நீராவியாதல் தடுக்கப்படுவதால், மழை பொழிவும் கணிசமாக பாதிக்கிறது.
பாதிப்புகளை தடுக்கும் முறைகள் (Control methods)
நடைமுறையில் நீர்நிலைகளில் உள்ள நீரை வெளியேற்றுவது, இயந்திரங்களை வைத்து அகற்றுவது, 2,4,டி போன்ற களை கொல்லிகள், அந்துபூச்சி மற்றும் பூஞ்சைகள் வைத்து இத்தாவரம் உருவாவது தடுக்கப்படுகிறது. இதை, நிரந்தரமாக அழிக்க முடியாது என்பதால், மேற்கூறிய நான்கு வழிமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தாவரத்தின் இலையில் நீர், காற்றுப் பை ஆகியவற்றுடன் சேர்த்து, சுரக்கும் எண்ணெய் போன்ற திரவத்தில், 'க்யூவெர்சிட்டின், யூஜினால்' உட்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட வேதியியல் தனிமங்கள் உள்ளன. இதனால் தீக்காயங்கள், நாட்பட்ட வெளிக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கொசு மருந்தாகவும் இத்திரவம் பயன்படுகிறது.
திரவத்தை தயாரிப்பது எப்படி? (How to prepare liquid)
நடைமுறையில் உள்ள வேதியியல் கலவைகளால் உருவாக்கப்பட்ட கொசு மருந்துகளால், பொது மக்களுக்கு சுவாச புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தயாரிப்பதற்கான செலவு அதிகமாகிறது. உதாரணமாக, வேதியியல் கலவை நிறைந்த 1 மில்லி கிராம் அளவு கொசு மருந்து தயாரிக்க 1,000 முதல் 1,200 ரூபாய் வரை செலவாகிறது. அந்த 1 மி.கி., அளவு வேதியியல் கொசு மருந்தில், 1 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கலக்கப்படுகிறது. எனினும், இந்த கொசு மருந்துகளுக்கேற்ப கொசுக்கள் அவற்றின் எதிர்ப்பு தன்மையை மாற்றிக் கொள்வதால், அவற்றை அழிக்க முடியவில்லை.
ஆனால், 1 மி.லி., அளவு கொசு மருந்து தயாரிக்க, 100 கிராம் அளவு வெங்காயத் தாமரையின் இலைகள் போதும். 1 மி.லி., திரவத்திற்கு, 1 லிட்டர் தண்ணீர் கலந்தாலும், திரவத்தின் கொசுவை அழிக்கும் திறன் பாதிக்காது.
அரசிற்கு கோரிக்கைை(Request for government)
எங்கள் கண்டுபிடிப்பின் படி, வெங்காய தாமரையில் இருந்து, 45 மி.லி., அளவு கொசு மருந்து தயாரிக்க, 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.
அதற்கு, வரி இனங்கள், இதர செலவுகள் என கணக்கிட்டு விலை நிர்ணயித்து விற்றால் கூட, 30 முதல் 40 ரூபாய்க்குள் தரமான இயற்கை கொசு மருந்தை மக்களுக்கு வழங்கலாம். இதை அடிப்படையாக வைத்து, சென்னை போன்ற பெரு நகரங்களில், இதற்கென தனி ஆலைகள் அமைத்தால், நாங்கள் அரசுக்கு ஆலோசனைகள் அளிக்க தயாராக உள்ளோம். இதனால், குறைந்த செலவில் இயற்கை கொசு மருந்து தயாரிக்கவும், வேலை வாய்ப்பை கொடுக்கவும் முடியும்.
மேலும் படிக்க