பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில், மற்றொரு மாநிலத்திலும், ரூ.2.5 கோடி வரை மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவசாயிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் பிஎம்-கிசாந் சம்மன் நிதி திட்டத்தை (PM-Kisan Samman Nidhi)மத்திய அரசு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. குறிப்பாக பயிரிடக்கூடிய நிலங்கள் தங்கள் பெயரில் உள்ள, நலிவடைந்த விவசாயிகள் இந்த நிதி உதவியைப் பெறலாம்.
இந்த பணம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கிறது. இதுவரை மோடி அரசு 6 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் கொடுத்துள்ளது. 7-வது தவணை டிசம்பர் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிஎம்-கிசான் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்திருப்பதும், விவசாயிகள் அல்லாதவர்கள் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதும் அம்பலமானது. இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஹிமாச்சல மாநிலத்திலும், பிஎம்-கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் (Kangra District) மொத்தம் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் உச்சக்கட்ட மோசடி என்னவென்றால், ஓய்வூதியதாரர்கள், வேளாண்துறை ஊழியர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருப்பதுதான்.
இதையடுத்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதுடன், பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக நாடே கொரோனா அச்சம் மற்றும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!