100% மானியத்தில் ஆழ்துளை கிணறு, பம்ப்செட் பெற விவசாயிகளுக்கு அழைப்பு, விரைவில் விசைத்தறிக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர் அறிவிப்பு, மீன் இறால் வளர்ப்பிற்கு 60% மானியம் அறிவிப்பு, வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு, தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை முதல்வர் அறிவிப்பு, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு, நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை, தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வெளியிட்ட Farmers Handbook முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க:
என்னது! அடுத்த நிலநடுக்கம் இந்தியாவுலயா!
1. 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு, பம்ப்செட் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து தரும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட அரசு ஆணை பிறப்பித்தது. தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்களை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டாலோ அதற்கு ஆகும் கூடுதல் செலவை அந்த விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 90030 90440 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
2. விரைவில் விசைத்தறிக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர் அறிவிப்பு!
விசைத்தறிக்கு, 1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர். விசைத்தறி ஒன்றுக்கு இதுவரை, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது, 1,000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது என்றும், கைத்தறிக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் இனி, 300 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு, விசைத்தறி மற்றும் கைத்தறிக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சார யூனிட்டுக்கான தொகையை, அரசு சார்பில் நேரடியாக மின்வாரியத்துக்கு மானியமாக செலுத்தப்படும்.
மேலும் படிக்க: உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக 40% மானியம்!
3. மீன் வளர்ப்பிற்கு 60% மானியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும், புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதியகுளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சமும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சமும் வழங்கப்படும். இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சம் பொதுபிரிவினருக்கு 40% மானியமாக 2.40 லட்சமும், பெண்களுக்கு 60% மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு!!
விவசாயத்தினை ஊக்குவிக்க வேளாண் துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் புதிதாக வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் கீழ்வருவன அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை வேளாண் திட்டத்திற்கு என PM Pranam எனும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் பயோ இன்புட் ரிசோர்ஸ் மையங்க்கள் அமைக்கப்படும். இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 3 ஆண்டுகளில் நாட்டில் 47 லட்சம் இளையோர் மேம்பாடு அடையும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சி.என்.ஜி உள்ளிட்ட பசுமை எரிசக்தி மேபாட்டு திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்க்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு முதலான வேளாண் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:
குழந்தை பெற்றுக்கொண்ட மாற்றுப்பாலின தம்பதிகள்
5. தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் பிற வகையான பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. அதனால் இதனை ஆய்வு செய்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கள ஆய்வு மேற்கொள்ள வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். வருகிற 6ம் தேதி அன்று கள ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஆகியோரிடம் தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை, இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6. பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப்பயிர்களான சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்திடும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் நிலையான வருமானம் கிடைக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, நடப்பு பருவ அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் முதலியவற்றை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பிரீமியத் தொகையைசெலுத்தி பயிர் காப்பீட்டினை வரும் பிப்ரவரி 28-க்குள் செய்து பயன்பெறலாம்.
7. நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால், அனுமதிக்கப்பட்ட 17 %க்கு மேல் நெற்பயிர் ஈரப்பதம் அதிகரிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நிரந்தரமாக 23% ஈரப்பதத்தை அரசிதழில் வெளியிட்டு அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். “கணிக்க முடியாத தட்பவெப்ப நிலை காரணமாக மழை பெய்கிறது. எனவே, அதிகபட்ச ஈரப்பதத்தைத் தற்போதைய 17 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்த்த வேண்டும், அதற்கு மட்டுமின்றி, மேலும் “மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறித்த அனைத்துப் பதிவுகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வைத்திருக்கிறது. ஈரப்பதத்தை அதிகரிக்க விவசாயிகள் முறையிட மாநில அரசு காத்திருக்க வேண்டியதில்லை. கனமழை அல்லது பனி பெய்யும் போது, விவசாயிகளின் நலனுக்காக பயிர்களின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளனர்.
8. தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை வெளியிட்ட Farmers Handbook
டிராக்டர், ரோட் டோவேட்டர், நெல் அறுவடை இயந்திரம், சூரிய சக்தி பம்பு செட்டு மற்றும் சூரிய கூடார உலர்த்தி ஆகியவற்றை இயக்குதல் மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில் நுட்பக் கையேட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விவசாயிகள் பெற்றுப் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
9. பயிர்காப்பீட்டுடன் இழப்பீடும் வேண்டும் என விவசாயிகள் போராட்டம்!
வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கியதுபோன்று பயிர்க்காப்பீடும் வழங்கவேண்டும், பாராமுகத்தோடு பயிர்க்காப்பீடு வழங்குவது நியாயமில்லை''’என போராட்டம் செய்து வருகின்றனர் விவசாயிகள். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு பெய்த மழையால் அதிக அளவு நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
10. வாழைவிளைச்சல் அமோகமாக வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதியான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டுவாழை, ரஸ்தாலி, திசுவாழை போன்றவை 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது. போதிய நீர்வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதற்கிடையே வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்ற திசு வாழைக்காய் தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. நாலிபூவன் ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், செவ்வாழை ரூ.35 முதல் ரூ.50 வரையும் காயின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
11. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள்!
திண்டுக்கல் எஸ்.கே.சீஸ் ஐவுளிக்கடை சார்பில் இயற்கை விவசாயம் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது மட்டுமில்லாமல் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விவசாயிகள் பாராட்டப்பட்டனர். இயற்கை விவசாயிகளான இரா.வெற்றிமாறன், வெள்ளைச்சாமி, விஜயலட்சுமி, பிரியா ராஜ்நாராயணன், பாலசுப்பிரமணி சங்கீதா ஆகியோரை எஸ்.கே.சீஸ் நிறுவனத்தினர் கேடயம் கொடுத்துப் பாராட்டியுள்ளனர்.
12. அரசுப் பேருந்துகளில் பயணத்தை எளிமையாக்கும் ஆப் அறிமுகம்!
அரசு விரைவுப் பேருந்துகள் வரும் இடம், பயணம் குறித்த தகவல்களை சென்னை பஸ் ஆப் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் App மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.
13. இரண்டு நாளில் மலைபோல் சரிந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம்!
ஆபணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கிச் செல்கிறது. நேற்று முன் தினம் 520 ரூபாய் குறைந்தது. நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது. சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களில் ரூ.1,350 சரிந்துள்ளது. இது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஒரு கிராம் தங்கம் ரூ.5,335-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.42,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் அட்டை : மத்திய அரசு உத்தரவு!