எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் மானியம் அறிவிப்பு, PM-kisan திட்டம் குறித்து வெளியான புதிய அப்டேட், தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் பயிற்சிகள் முதலான வேளாண்மை சார்ந்த தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் மானியம் அறிவிப்பு!
உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் எண்ணெய் பனை சாகுபடிக்குத் தேவையான பாசன வசதியினை உருவாக்கவும், கன்றுகளைப் பயிரிட்டுப் பாதுகாப்பதற்கும் 3 லட்சம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தினை வழங்குவதற்கு எனத் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, பயன் பெறுமாறு வேளாண்மைத் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
PM-kisan திட்டம் குறித்து வெளியான புதிய அப்டேட்
PM-kisan திட்டத்தில் புதிய விதி வந்துள்ளது. உண்மையில், பிஎம் கிசான் திட்டத்தில் மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு தீவிரக் கண்காணிப்பை உருவாக்கியுள்ளது. எனவே, விவசாயிகள் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர, தகுதியற்றவர்களை அடையாளம் காணும் வகையில், இந்த திட்டத்தின் விதிகளை அரசு மாற்றியுள்ளது. எனவே, விவசாயிகள் விரைவில் தங்கள் ஆவணங்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்
விவசாயிகள், தாட்கோ மூலம் கடன் பெறுவதற்கான, வருமான உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உதவுவதற்காகத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக விவசாயிகளின் நலனுக்கு இத்திட்டம் கூடுதல் உதவிகளை வழங்குகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Ready Meals என்றழைக்கப்படும் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய இரண்டு நாள் பயிற்சி வருகிற ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், தோசை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ்ட, கீர் மிக்ஸ், அடை மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கீரிம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ் ஆகியவைகளை எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வாயில் எண் 07 -இல் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் பயிற்சிகள்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் இரண்டு பயிற்சிகளை அறிவித்திருந்தது. அதாவது, உவர்நீர் மீன் வளர்ப்பு மற்றும் மூலிகை உணவுப் பொருள்கள் தயாரிப்பு ஆகிய இரண்டு பயிற்சிகளை அறிவித்திருந்தது. இதில் உவர்நீர் மீன் வளர்ப்பு பயிற்சி இன்று சிறப்புற நடந்தேறியது. அதே நிலையில், மூலிகை உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் ஆகஸ்ட் 25-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
விவசாயப் பிரச்சனைகளை ஆராய நான்கு புதிய குழுக்கள் அமைக்கப்பட்டது
விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில், இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகளைக் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பல்வகை பயிர்களை பயிரிடுவது, பயிரிடும் முறையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் வெளிப்படையாக ஆக்குவது ஆகியவை குறித்து முதல் துணை குழு ஆய்வு செய்யும் எனவும், 2-வது குழு, நுண்நீர் பாசனம் பற்றியும், 3-வது குழு இயற்கை விவசாயம் பற்றியும், 4-வது குழு பல்வகை பயிர்களை பயிரிடுவது பற்றியும் ஆய்வு செய்யும் எனக் கூறப்படுகிறது.
திருப்பதியில் அக்டோபர் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் நாளை முதல் வெளியீடு
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் நேரடியாகப் பக்தர்கள் பங்கேற்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்தீப அலங்காரச் சேவை ஆகியவைகளுக்கான டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க
விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!
விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய 4 துணை குழுக்கள் அமைப்பு!